பெண்ணுண்ணிகள் குழந்தைகளும் பாலியல் கொலைகளும்
பெண்ணுண்ணிகள்
(குழந்தைகளும் பாலியல் கொலைகளும்)
ஒட்டுண்ணியாய்
உயிர்பெறும் கருவரையில்
உயிர்ச்சத்து
உடற்சத்து பருகி உயிர்வாழும்
பெருவலியளித்து
அந்தரங்கம் பிளந்து வெளியேறும்
முலையறிஞ்சி
பால்பருகி பசியாறும்
தாயின் பசியறியாமல்
தானே தின்று உடல்வளர்க்கும்
பிறன்வலியறியாமல்
உடல்பழித்து உரையாடும்
அவமானங்கள் உணராமல்
உடுக்கையகற்றி விளையாடும்
உயிர்த்தன்மையற்று
ஊனுண்டு ஊன்பெருக்கும்
காதலற்று
காமப்பெருக்கெடுத்து அலைந்து திரியும்
உறவுகள் கடந்து
உடல் பருகும்
பருவங்கள் பார்க்காது
காமப்பசியாறும்
குரூரம் நிறைந்து
குழந்தைகளை இரையாக்கிக் கொல்லும்
எண்ணங்கள் முழுவதும்
புணர்தலை பெருங்கனவாய்
பெண்ணின் மார்பையும்
பிறப்புறுப்பையும் சுமந்துகொண்டு
பெண்ணால் பிறந்து
பெண்ணால் வளர்ந்து
பெண்ணுடனே வாழும்
பெண்ணுண்ணிகள்