வீணையில் விரல்களாய் எனைமீட்டு
மோகனப் புன்னகை வீசிடும் நிலவே
***முத்தொளிர் கண்களால் கதைபேசு !
தேகமும் சிலிர்த்திடத் தென்றலின் சுகத்தில்
***சில்லென நீயொரு கவியெழுது !
மேகமும் திரண்டிட மழைவரும் பொழுதில்
***மெல்லிதழ் சிவந்திடக் கனிவோடு
வேகமாய்க் கைவளைக் குலுங்கிட அணைத்து
***வீணையில் விரல்களாய் எனைமீட்டு !
மார்கழிக் குளிரினைத் தாங்கிட முடியா
***மன்னனின் நிலைதனை உணராயோ ?
போர்வையுள் இருமனம் பேசிடும் தருணம்
***பொங்கிடும் உணர்வினை அறிவாயா ?
மார்பொடு தழுவிட ஏங்குதென் இதயம்
***மங்கையே அணைத்திட மறுப்பாயா ?
பார்வையால் கொஞ்சிடும் பாவையே எனக்குப்
***பஞ்சணை சுகமதைத் தருவாயா ?
கொண்டையில் மல்லிகைப் பூச்சரம் மணக்கக்
***கொஞ்சிட உள்ளமும் துடிக்கிறதே !
வண்டென விழிகளின் வசியமும் கவர
***வஞ்சியுன் அழகினை ரசிக்கிறதே !
பெண்மயில் அருகினில் இருக்கையில் மனமும்
***பெருமையில் துள்ளியே குதிக்கிறதே !
கண்மணி காதலால் உருகிடு மெனக்கு
***கருணையாய்க் கடைக்கண் திறப்பாயே !