யார் இவளோ

சிப்பிக்குள் மறைந்திருக்கும் நல்முத்தோ ?
***செவ்வானில் கண்சிமிட்டும் விண்மீனோ ?
ஒப்பில்லா ரவிவர்மன் ஓவியமோ ?
***உயிர்த்துடிப்பில் இதம்கூட்டும் மெல்லிசையோ ?
சப்பரத்தில் அசைந்துவரும் சிலையழகோ ?
***சாரலிலே தவழ்ந்துவரும் மென்காற்றோ ?
முப்போதும் மனமினிக்கும் பூமழையோ ?
***முல்லைப்பூந் தோட்டத்தின் நறுமணமோ ?

திங்களிலே ஒளிவாங்கி வந்தவளோ ?
***தென்றலிலே சுகமள்ளித் தந்தவளோ ?
பொங்கிவரும் அருவியெனக் குளிர்ந்தவளோ ?
***புன்னகையால் உள்ளத்தைக் கவர்ந்தவளோ ?
செங்காற்றாய் மெய்வருடிச் செல்பவளோ?
***செங்காந்தள் விரல்மீட்டும் யாழிசையோ ?
சிங்கார மாய்க்கொஞ்சும் அஞ்சுகமோ ?
***சிலிர்ப்பூட்டும் மலரிதழின் பனித்துளியோ ?

பஞ்சணையில் நெஞ்சள்ளும் தேன்நிலவோ ?
***பசும்பொன்னாய் ஒளிவீசும் பால்நிலவோ ?
மஞ்சுளமாய்க் கதைபேசும் கயல்விழியோ ?
***மயங்கவைக்கும் இடையழகில் பூங்கொடியோ ?
கொஞ்சுகையில் மதுவழியும் செவ்விதழோ ?
***குரலழகில் கொள்ளைகொள்ளும் மணிக்குயிலோ ?
வஞ்சியவள் வனப்பினிலே சித்திரமோ ?
***வண்ணவண்ணக் கனவுகளால் வதைத்தாளே ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Feb-17, 12:22 pm)
பார்வை : 151

மேலே