பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - தரவு கொச்சகக் கலிப்பா - மரபு கவிதை
நந்தவனப் பூக்களினால் நாடுகின்றார் கோதையரும்
விந்தையான யசோதையும் விடிவெள்ளி மன்னவனை
உந்தியுமே அழைத்திடவே உலகமுமே வாய்திறந்தால் .
தந்திரங்கள் பலசெய்வான் தப்பிப்பான் பொய்சொல்லி !!!
ராதையவள் மயங்கிடவும் ராகங்கள் பாடிடவும்
கோதையவள் மனம்மகிழக் கோலங்கள் போடுவரே.
வேதையின்றி இத்தனையும் வேந்தனுமே செய்திடுவான்
பாதைபல அமைத்திடுவான் பக்தர்கள் குறைதீர்க்க !!!
கன்னியரின் காதலனாம் காணுதலே இன்பந்தான் .
சின்னவனாம் சிங்காரச் சிரிப்பினிலே ஏமாற்றும்
பன்முகத்தான் வித்தைகளை பலசெய்யும் வித்தனவன்
மன்னவனாம் நந்தவன மலர்சூடும் எழிலழகன் !!!!
கண்ணனவன் விளையாட்டைக் கண்டவர்கள் மகிழ்வாரே
வண்ணனவன் செய்திட்ட வர்ணசாலம் வகையுறவே
பெண்களெல்லாம் ஊமையாகிப் பெருமையினைப் பேசிடுவர்.
மண்ணுலகில் நந்தவனம் மகத்துவத்தைச் செப்பிடுமே !!
குழலோசைத் தனில்மயங்கிக் குதூகலமும் ஒன்றுசேர
அழகான நீலவண்ணன் ஆதிக்கம் நடத்திடுவான்
பழகிடவே ஓடிவரப் பலர்நோக விளையாட
மழலைமொழிக் கண்ணனுமே மந்தகாசப் புன்னகைப்பான் !
விழிகளிலே காதலுடன் விருப்பமாகப் பெண்டிரெல்லாம்
வழிந்தோடி வருவார்கள் வந்தணைத்தும் கொள்வார்கள் .
பழிபலவும் சொல்லிடுவான் பறந்தோடி மறைந்திடுவான் .
எழிலுடைய உருவத்தால் ஏற்பானே அனைவரையும் .
மாயனவன் செய்கின்ற மறுப்பில்லா விளையாட்டைத்
தாயவளாம் யசோதையும் தணிவாகக் கண்டிப்பாள்.
மாயவனோ ஏமாற்றி மாயங்கள் செய்திடவும்
தீயாகப் பரவிடுமே திக்கெல்லாம் குழலிசையே !!!
தோட்டத்து மலர்களெல்லாம் தோகையினை விரித்தாடும் .
பாட்டெல்லாம் பாடுதற்குப் பாவையரும் கூடுவரே .
ஓட்டையெல்லாம் உடைத்திடுவான் ஓடுவானே அங்குமிங்கும்
வீட்டினுள்ளே புகுந்திடுவான் விரைந்திடுவான் தாய்வரவே !
வாசுதேவக் கண்ணனுமே வந்திடுவான் நந்தவனம்
ஆசுதனைக் களைந்திடவே அகிலமுமே வியப்படையும் .
மாசுதனைப் போக்கிடுவான் மங்கையரை வம்பிழுத்தே
தேசுடைய தேகத்தான் தெளிவானே ராதையிடம் !!
கோபியர்கள் ஒன்றுகூடி கோகுலத்துக் கண்ணனையும்
தாபிப்பர் தன்பதியாய் . தங்கட்டும் அவர்நினைவும் .
யாபித்தே எம்மருங்கும் யாங்கணுமே நின்றிடுவான் .
கோபித்துக் கொள்வானாம் கொஞ்சுகின்ற மொழிதனிலே !
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்