வாங்க பேசலாம்
காலையிலே அரசியலா?..
கடைசிவரை பேசுங்கள்!
மாலையிலே நான்வந்து
மாலைவாங்கி போடுகின்றேன்
பகல்முழுதும் அரசியலைப்
பரபரப்பாய்ப் பேசுங்கள்
இரவினிலே நல்லபடி
ஏங்காமல் தூங்கிடலாம்!
பேசுவதால் மாற்றங்கள்
பேஷாக நடப்பதுபோல்
ஆசையுடன் அனுதினமும்
கூசாமல் பேசிடுவோம்
மார்க்கத்தைப் பேசிடுவோம்
மாண்புகளைப் பேசிடுவோம்
தீர்கத்தான் முடியாத
தீர்ப்புகளைப் பேசிடுவோம்
பழையகதை பேசிடுவோம்
பரம்பரையைப் பேசிடுவோம்
வளையவைக்கும் தந்திரத்தால்
வகைவகையாய்ப் பேசிடுவோம்
உலகத்தை உருளவைக்க
உருப்படியாய்ப் பேசிடுவோம்
கலகத்தை உண்டுபண்ண
களிப்புடனே பேசிடுவோம்
பிரதமரைத் திட்டிடுவோம்
பிறர்தமையும் திட்டிடுவோம்
பரதமதை நாக்காலே
பக்குவமாய் ஆடிடுவோம்
புள்ளிகளை விவரங்களைப்
புரியாத மற்றவர்க்கு
துள்ளிவந்து சொல்லித்தந்து
துடிப்புடனே பேசிடுவோம்
அரசாங்கம் சரியில்லை
அனைத்துலகும் சரியில்லை
பிரசங்கம் நம்போலும்
செய்வதற்கும் ஆளில்லை
நன்றாகப் பேசிடுவோம்,
நண்பர்களே முடிந்தமட்டும்
நல்லதையே பேசிடுவோம்!
நமக்குள்ளே இதுபோதும்!
அ.மு.நௌபல்