வளரும் செடிகள் வளமாகும் வாழ்வு - மரபு கவிதை
பாரதிதாசன் சான்றிதழ் போட்டியாளர்
வளர்கின்ற செடிகளாலே
----- வளமாகும் நம்வாழ்வு .
தளிர்போன்ற மென்மையான
------ செடிகளது இலைகளுமே
களிப்புடனே நமைப்பார்த்துக்
------ கையசைத்து உரையாடும் .
தெளிந்ததோர் நீரோடை
------ தெரிவிக்கும் இன்பத்தை .
செடிகளையும் வளர்த்திட்டால்
------ செழுமையாகும் வாழ்க்கையுமே
கொடிகளாகப் பரவிநின்று
------- கொழுந்துகளும் மூலிகையும்
நொடிப்பொழுதில் நோய்தீர்க்கும்
------ நோயில்லா வாழ்வுவரும் .
கடிதினிலே கிட்டிடுமே
------- காரணமே வளர்செடியாம் !
வீட்டுமாடித் தோட்டத்தை
------ விரிவாக வைத்திடுவோம் .
பூட்டுமட்டும் தொங்கினாலே
------ புன்னகைப்பூ மலராதே !
தோட்டத்தில் பாத்திகட்டித்
------ தோன்றசெய்வோம் செடிகொடியை !
காட்டுப்பூ பூத்திருக்கக்
------ கானகமும் சோலையன்றோ !
சோலையிலே பூக்களெல்லாம்
------ சொல்லுகின்ற சேதியினைக்
காலையிலும் கண்விழித்தே
------ கண்டிடலாம் இதமாக
மாலையிலும் மனங்குளிர
------ மயங்கிடுவோம் மலர்கண்டு .
சாலையிலே இருமருங்கும்
------ சத்தான மரம்வைப்போம் !!!
தொட்டியிலே முளைக்கின்ற
------ தொங்குகின்ற பந்தலிலும்
வட்டமாக வளர்கின்ற
----- வண்ணமலர் அழகினிலும்
சட்டென்று துயரங்கள்
------ சகலமுமே நீங்கிவிடும் .
மட்டில்லா மகிழ்ச்சியினை
------ மண்ணுலகில் பெற்றிடலாம் !!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்