தொட்ட பெட்டா

நீலகிரி மலைத் தொடரில் மிக உயர்ந்த சிகரம் எது? என்ற கேள்விக்குப், பள்ளியில் (1963-69) தொட்டபெட்டா என்று படிக்கும் போது அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தோன்றும்...

சிகரம் என்றாலே உச்சி, உயர்ந்தது என்றும் குழந்தையாய் இருக்கும் போது அவை இன்னும் பெரிதாகத் தோன்றியது... சுற்றி வனப் பகுதி என்ற கூடுதல் தகவலும் பிரமிப்பை ஊட்டியது...

அந்த பிரமிப்பு கண்முன் 25 வருடங்கள் பல எண்ணங்களைத் தோற்றுவிக்க, 35-வது (1986) வயதில் அதைக் காணும் வாய்ப்பு கிட்டியது. குடும்பத்துடன், மைசூர், ஊட்டி சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, தொட்டபெட்டா சிகரம் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக இருந்தது...

ஊட்டியில் ஊர் சுற்றிக் காண்பிக்கும் வாடகை வண்டிக்காரர், தொட்ட பெட்டா அழைத்துச் செல்வேன் என்று கூறியதும், இன்னும் ஆர்வம் கூடியது... மனைவி தன்னால் மலை ஏற முடியாது எனக் கூற, பிள்ளைகள் மிக ஆர்வமாக இருந்தனர். நானும்தான்...

மதியம் சுமார் 12 மணிக்கு ஓரிடத்தில் இறக்கிவிட்டவர், "தொட்ட பெட்டா பாத்துட்டு வாங்க" என்றார்... மலையெல்லாம் ஏற வேண்டுமே நேரமாகுமே அதுவரை அவர் இருப்பாரா என்று கேட்க, என்னை ஒரு மாதிரி பார்த்தார்...
நிறைய கடைகள், சின்ன சின்ன உணவு வகைகள் விற்பவர்கள், ஒரு திருவிழா கோலத்தில் இருந்தது அந்த இடம்.. எல்லோரும் சத்தமாகப் பேசிக் கொண்டு எதையோ தின்று கொண்டிருந்தார்கள்...

பள்ளியில் படித்து கற்பனையில் வளர்த்த 'மிக உயர்ந்த சிகரத்தை' தேட அந்தக் கட்டாந்தரையில் ஒன்றும் தெரியவில்லை. அருகில் இருப்பவர்களை விசாரிக்க, இதுதான் என்றார்.. இதுதான் என்றால், தொட்ட பெட்டா சிகரத்துலதான் நீங்க நிக்கறீங்க. நம்பிக்கை இல்லாமல் சுற்றிப் பார்க்க ஒரு மங்கலான பெயர் பலகை "தொட்ட பெட்டா - சிகரம், 8650 அடி' என்று பல் இளித்தது....

யாருகிட்ட.... நான்க அப்பவே இயற்கையை எல்லாம் ஆட்டையைப் போட்டவங்க...
---- முரளி

எழுதியவர் : முரளி (23-Feb-17, 8:30 am)
சேர்த்தது : முரளி
பார்வை : 271

மேலே