காத்திருந்த நேரம்

நேரத்துக்கு வந்து நீண்ட நேரம்
காத்திருக்க நேர்ந்தும்
வாராமல் போவதுண்டு பேரூந்து

கால்கடுக்க வரிசையில் நின்று
காத்திருந்த நேரம்
கைவிரித்து இல்லையென
கதவை மூடிச் செல்லலாம்
கூட்டுறவு மளிகைக்கடை

ஒன்றாம் திகதி என்ற
உறுதியின் காத்திருப்பில்
இயந்திரத்துள் செல்லும்
வங்கி அட்டை சென்ற வேகத்தில்
திரும்பி வந்து சம்பளம்
பதிவாகாததைச் சொல்லலாம்.

கட்டாயம் தருவதாகச் சொல்லி
கடைசியில் நாளைக்கு வா
என்கின்றக் கடன்காரனிடம்
காத்திருந்த நேரம்
ஏமாற்றம் தரலாம்.

பதவியில் அமர்ந்ததும்
செய்வதாகச் சொன்னதெல்லாம்
நடக்குமென்று காத்திருந்த நேரம்
கட்சிமாறும் குணத்தால்
காட்சி மாற்றம் ஆகலாம்.

வருவதாகச் சொல்லிவிட்டு
வாராமல் ஏமாறும்
காத்திருந்த நேரத்தில்
கவலைகள் நீளலாம்

என்றாலும் அன்பே
கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு
காத்திருந்த நேரம் வாராமல் போனதில்லை
கனவுகளில் நீ
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-Feb-17, 1:56 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 366

மேலே