பகல் கனவு - சிறுகதை

பகல் கனவு
(சிறுகதை)
ஆயிரம் ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் மின்மினியென கண்சிமிட்டி சிறகடித்துப் பறந்தன. மலர்தோறும் நறுந்தேனினைப் பருகிட கருவண்டுகள் ரீங்கரித்து ஆர்ப்பரித்துப் பறந்தன.

வண்ணமலர்கள் விதவிதமாய் நறுமணம் பரப்பி கொல்லையில் பூத்துக் குலுங்கின. எண்ணற்ற காய்கறிகள் எடுத்தியம்ப இயலா வண்ணம் காய்த்துக் கிடந்தன. அதனருகே இருந்த கடலிலே வெள்ளி அலைகள் வட்டமிட்டுத் தாவித்தாவித் தாள்மலரை முத்தமிடத் துடித்தன. வசந்தத் தென்றல் வாயில் வழி நுழைந்து மெல்லக் கூந்தலை வருடியது.

வீட்டின் முற்றத்திலோ புதுமணல்பரப்பி பூசி மெழுகிய மென் தரையில் கண்கவர் வண்ணக்கோலங்கள் எண்ண அலைகளுக்கேற்ப பிரகாசித்தன. அவ்வில்லத்தின் உள்ளோ அகிற்புகையும், சந்தனமும் நாசியைத் துளைத்து ஊடுருவி உள்ளத்தில் ஏதேதோ மாற்றங்களை எழச்செய்தன.

அம்மட்டுமா? தோரண வாயில்களும், வகை வகையான அலங்கார விளக்குகளும் ஜொலித்து அவ்வில்லத்தின் மிளிர்வுக்கு மேலும் மெருகூட்டின. அருகருகே உள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் யாவினையும் விட விண்ணை முட்டும் அளவு பெருமித்தத்துடன் இருந்தது அவ்வீடு.

எட்டுத்திக்கெங்கினுமிருந்து திரளாகத் திரண்டுவரும் விருந்தினர் கூட்டங்கள் மூக்கின் மேல் விரல் வைத்து வியந்து போற்றும் அறுசுவை அடிசில் அவரவர் போதும் போதும் என்னுமளவிற்கு வந்து குவிந்தவண்ணம் இருந்தன.

ஆங்காங்கே காணப்பட்ட அறைகளில் கண்கவர் வண்ண ஆடை வகையறாக்கள், பண்டு முதல் இன்றுவரையிலான ஒளிர்வீசும் ஆபரண வகைகள், பழமை முதல் புதுமை வரையிலான நவநாகரிகத்தை தெற்றென எடுத்தியம்பும் பாத்திரவகைகள், சங்கப் புலவர்கள் முதல் இன்னாள் கவிஞர் வரை இயற்றிய கிடைத்தற்கரிய நூல்வகைகள் இன்னும், இன்னும், இன்னும்........ பல்வகைப் பரிசுப் பொருள்கள்.....

அப்பப்பா! இது புவியா, அன்றி இந்திர உலகா? என எண்ணவக்கும் வண்ண ஜாலங்கள், அதோடு நவநாகரிக நங்கையர் வரையில் உள்ள கன்னியரின் நளின நடனங்கள், மேலும் கேட்டதையெல்லாம் நல்கும், கற்பகத்தருவும், காமதேனுவும் கூட அங்கே இருந்தன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இன்னும் எத்தனை! எத்தனை! எத்தனை! ம்.... சொல்லிமாள முடியவில்லை.

இவையெல்லாம் எங்கே எனக் கேட்கத்தோன்றுகிறதா? இத்தனையும் தங்கப் பதுமையெனத் திகழும் பரிமளாவின் இல்லத்தில் தான். பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் பரிமளா அவள் அன்புப் பெற்றோர்களுக்கு ஒரே மகள். அடுத்தமாதம் நடைபெற இருக்கும் பொதுத்தேர்விற்கு இப்பொழுதே ஆயத்தமாகிவிட்டாள். இடையறாது ஓய்வின்றிப் படித்த அவள் அன்று ஒருநாள் விடுமுறையென்றதால் சற்றே கண்ணயர்ந்தாள்.

வறுமையின் எல்லைக்கோட்டு விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் குடும்பத்தில் பிறந்த அவள், தான் மிகவும் நன்றாகப் படித்து, உழைப்பால் முன்னேறி, ஊரே மெச்சும்படி ராஜ பரம்பரையினரைப் போல் தன் பெற்றோர்களைப் பேணவேண்டும் என்பதனையே தன் லட்சியமாகக் கொண்டிருந்தாள்.

எப்பொழுதும் இச்சிந்தனை ஒன்றையே தன் தாரக மந்திரமாய்க் கொண்டிருந்தமையால், அன்றைய பகலில் அவள் சற்றே கண்ணயர்ந்தத் தருணத்தில் தான் அவள் இல்லம் மேற்கூறியவாறு காட்சி நல்கியது. இது போன்ற பரிமளாக்கள் எத்தனை எத்தனைப் பேர் உள்ளனர் அல்லவா? நம்மால் பரிமளாவிற்கு எவ்வகையிலாவது உதவ முடியும் என்றால் அவள் பகல் கனவு பலிக்க இறையருள் வேண்டிப் பிரார்த்தனை செய்யலாமே!

எழுதியவர் : திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி (25-Feb-17, 8:44 pm)
பார்வை : 820

மேலே