பிறவாதே என் மகளே

பிறவாதே என் மகளே பிறவாதே..
மனிதம் மறித்த இம்மண்ணில்
மலராதே என் அரும்பே மலராதே..
பெண்ணென தெரிந்தாலே
பிணத்துடனும் புணர்வாரே
பெண்ணாக நீயும் பிறவாதே என் உயிரே..
மெல்லிய மலர் மேனி
மேய்ந்திட துடிப்பாரே
துளிர்க்காதே என் தளிரே துளிர்க்காதே...
கருவென கண்டாலும்
கலைத்திட துணிவாரே
கனியாதே என் மலரே கனியாதே..
பிஞ்செனவும் எண்ணாமல்
பிழிந்திட விரைவாரே
பிறக்காதே என் கனவே பிறக்காதே..
சதை கொஞ்சம் கண்டாலே
சிதைத்திட்டு சிரிப்பாரே
செழிக்காதே என் செல்வமே செழிக்காதே..
மறுத்து நீயும் புவி உதித்தால்
கள்ளிப் பாலும் துணையில்லையே..
கருவறை தொடங்கி
கல்லரை முடிய
கடவுளும் உன்னை காப்பதற்கில்லையே..
பிறவாதே என் மகளே பிறவாதே...
~ கிருஷ்ணநந்தினி