கோபப்படுதல் பாவமென்றால், கோபமூட்டுதல் அதைவிடவும் மகாகொடிய பாவம்
கோபப்படுகின்றவன் வெளிப்படையானவன். ஆனால் கோபமூட்டுகின்றவன், நல்லவனைப்போல் தன்னைக் காட்டிக்கொண்டு திரைமறைவில் சதிவேலை செய்கின்றவன்.
இயல்பான கோபம் உடனடியாகத் தணிந்துவிடும். அதனால்தான் ‘ஆறுவது சினம்’ என்றாள் அவ்வை.
பிறரால் தூண்டப்படுகின்ற கோபமோ, தணியும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் தூண்டிவிடப்பட்டுக் கொண்டே இருக்கும். அதுதான் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தெருவில் இரண்டு பேருக்கிடையே வாய்த்தகராறு. அதைச் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதற்கு ஒரு கூட்டம்.
இருவரும் எப்போது கட்டிப்புரண்டு உருளுவார்கள், யார் முதலில் கத்தியை எடுத்து அடுத்தவனைக் குத்துவான், இந்தச் சண்டை இன்னும் எவ்வளவு நேரம் நீடிக்கும். இப்படித்தான் அந்தக் கூட்டம் எதிர்பார்த்து நிற்கிறது.
சண்டையின் வேகம் கொஞ்சம் தணிந்து, இருவரும் விலகிச்செல்ல தயாராகி விடுகிறார்கள். வேடிக்கை பார்க்கும் கூட்டத்திலிருந்து ஒரு குரல் வருகிறது.
‘எங்கிட்ட மட்டும் ஒருத்தன் இப்படி பேசியிருந்தா, இந்நேரம் அவன் மண்டைய பெளந்திருப்பேன்’ என்கிறான் ஒருவன்.
‘அதுக்கெல்லாம் நெஞ்சில துணிச்சல் வேணும். இவன்க சும்மா... வெறும் வாய்ச்சவடால்தான்’ என்று கிளறிவிடுகிறான் இன்னொருவன்.
சூடு தணிந்த சண்டை மீண்டும் அனல் தெறிக்கத் தொடங்குகிறது. கைகலப்பு ஏற்பட்டு, ஒருவனுக்குப் பல் உடைகிறது.
ஒருவனுக்குக் காது கிழிந்து ரத்தம் வழி கிறது. அதன் பின்னர்தான், தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தவர்களுக்கு ஒரு மனநிறைவு.
அப்படித் தூண்டிவிடுகிறவர்கள் தெருவீதிகளில் மட்டு மல்ல, உங்கள் அக்கம்பக்கத்திலும் இருப்பார்கள்; உங்கள் நண்பர்களிலும், உங்களுடைய சொந்த உறவினர்களிலும் இருப்பார்கள்.
இருவருக்கிடையே புகுந்து சண்டையைத் தூண்டிவிடு வது மிக சுலபம். அது ஓர் அற்ப புத்தி.
அத்தகைய அற்ப சிந்தை உடையவர்களால் எத்தனை ஊர்களில், எத்தனை எத்தனை குடும்பங்களில் பிரிவினைகளும், விரோதங்களும், படுகொலைகளும் நிகழ்ந்துவிடுகின்றன.
சண்டை ஏற்படுகின்ற இடங்களில் சமாதானம் செய்கின்றவர்களைக் காண்பது அரிது.
ஆனால் அந்தப் பண்பு தெய்வீகமானது. அதனால்தானே ‘சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்’ என்று சீனாய் மலைப் பொழிவில் இயேசு பெருமான் கூறினார்.
கைகேயி தாயின் வரத்தால் ராமன் காடு செல்ல நேரிடுகிறது. அதை அறிந்த லக்குவன் சீறி எழுகிறான்.
உலகை, மகளிரை, யாவரையும் அழித்துவிடுவேன் என்று கோபம் கொப்பளிக்கப் பேசுகிறான்.
அப்போது, மகுடமிழந்த ராமன் இதுதான் சரியான தருணமென்று, லக்குவனின் ஆத்திரத்தை மேலும் தூண்டிவிடவில்லை. மாறாக, லக்குவனைப் பார்த்து,
நதியின் பிழையன்று; நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த
விதியின் பிழைநீ இதற்கு என்னை வெகுண்டது
என்று கூறி அவனை அமைதிப்படுத்துகிறான்.
ராமன் மிகமிகப் பக்குவமாகச் சொன்னதைக் கேட்ட பிறகுதான் தம்பி லக்குவனின் கோபம் தணிந்தது.
கலவரம் ஏற்படும் தருணங்களில், சமாதானம் பண்ண அங்கு ஒருவர் இருந்துவிட்டால் போதும். மிகப்பெரிய ஆபத்துகளைத் தவிர்த்து விடலாம். ஆனால் எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவதுபோல் செயல்படுகிறவர்கள்தான் ஏராளம்.
அவர்களால் அல்லவா பகையும் வெறுப்பும் சண்டைகளும் அணையா நெருப்பாய் பல்வேறு இடங்களில் பற்றி எரிந்துகொண்டே இருக்கின்றன.
இனி உறவே இல்லை என்று சொந்தங்கள் பிரிந்து செல்வதற்கும், ஒருவரை ஒருவர் அழிக்கத் துடிப்பதற்கும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள கோபம்தான் காரணம்.
தற்கொலை என்றாலும், கொலைக்குற்றம் என்றாலும் ஓர் உணர்ச்சி வேகத்தில் நிகழ்ந்துவிடுவதுதான். அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மறைமுகமாகவோ நேரடியாகவோ யாரோ ஒருவரால் அல்லது சிலரால் தூண்டிவிடப்படுகிறார்கள் என்பதே உண்மை.
சாதாரண தகராறு ஆகட்டும், வெட்டுக்குத்துச் சண்டையாகட்டும், கோபம்தான் அடிப்படை. தனியே அமர்ந்து சிலநிமிடம் சிந்தித்தால் கோபத்தின் வேகம் குறைந்து விடும்.
ஆனால் சுற்றியிருப்பவர்கள் சிந்திக்க விடமாட்டார்கள். இருவர் முட்டி மோதிக் கொண்டால், அதுதான் அவர்களுக்குத் திருவிழாக்கூத்து.
ஒரு வீட்டின் அண்ணன் தம்பிக்குள் மோதல் வந்துவிட்டால், பக்கத்து வீட்டுக்காரன் எட்டிப் பார்ப்பான். வழியில் தம்பியைச் சந்தித்து மெல்ல பேச்சுக் கொடுப்பான்.
‘என்னதான் இருந்தாலும் உங்க அண்ணன் அப்படி செஞ்சிருக்கக் கூடாது. நீங்களும் இவ்வளவு ஏமாளியா இருக்கக் கூடாது.
பேசிப் பாருங்க. சரிப்பட்டு வரலேன்னா, இருக்கவே இருக்காரு எனக்குத் தெரிஞ்ச வக்கீல்’ என்று அவன் காதில் ஓதிவிடுவான்.
அடுத்தவர்களின் குடும்பம் ரெண்டுபட்டால் சிலருக்கு மகிழ்ச்சி. அதற்கு அவர்கள் கையாள்கின்ற ஒரே உத்தி, ஒருவர் மீது ஒருவருக்குக் கோபத்தைத் தூண்டிவிடுவதுதான். அப்படிப்பட்டவர்களிடம் நமக்கு அதிக எச்சரிக்கை அவசியம்.
பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகளையும், பிள்ளைகளுக்கு எதிராகப் பெற்றோரையும் கோபமூட்டி முறுக்கேற்றி விடுகின்ற உறவினர்கள் உண்டு.
உங்கள் குடும்பத்திற்குள் நுழைந்து கபட நாடகம் ஆடுவார்கள். நம்பி விடாதீர்கள்.
மாமியாருக்கு விரோதமாக மருமகளையும், மருமகளுக்கு விரோதமாக மாமியாரையும் கிளப்பி விடப்பார்ப்பார்கள். செவி சாய்த்து விட்டால் நஷ்டம் உங்கள் குடும்பத்திற்குதான். மறந்துவிடாதீர்கள்.
சிலர் உங்களைக் கோபப்படுத்தி வம்புச் சண்டைக்கு இழுப்பார்கள். அந்நேரம் நீங்கள் அமைதி காத்துக் கொள்ளுங்கள். அதுதான் உத்தமம்.
ஒருமுறை புத்தபெருமானைக் காண வந்த ஒருவன், அவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தான். அவன் பேசியவை, கேட்போரையெல்லாம் கோபமடையச் செய்தன.
ஆனால் புத்தரோ எதுவும் பேசவில்லை. அவன் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தார். சீடர்கள் அவரை வியப்புடனும் கேள்விக்குறியுடனும் பார்த்தனர்.
வந்தவன் போனபின்பு புத்தர் சீடர்களைப் பார்த்து ‘உங்களுக்கு ஒருவன் ஒரு பொருளைக் கொடுக்கிறான்.
அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அது திரும்ப அவனிடம்தானே போய்ச் சேரும்.
நிந்தனைகளும் அப்படித்தான். அவற்றை நாம் பொருட்படுத்தாவிடில், அவையும் அவனையேதான் சாரும்’ என்றார்.
கோபம் பொல்லாதது. கோபமூட்டுதல் கொடியது. இந்த இரண்டிற்கும் நம்மை விலக்கிக் கொள்வது நம் வாழ்க்கைக்கு நல்லது.
அவசர யுகம், பரபரப்பான வாழ்க்கை, அன்றாட பணிச்சுமைகள், பல்வேறு பிரச்சினைகள், நேர நெருக்கடி எல்லாவற்றையும் சமாளித்தாக வேண்டும்.
சில சமயங்களில் கோபம் வந்துவிடுவது சகஜம்தான். ஆனால் ஒருவர் கோபப்படும்போது இன்னொருவர் அவரை அமைதிப் படுத்த வேண்டும்.
கணவன் கோபப்பட்டால் மனைவி பொறுத்துக் கொள்வதில் ஒன்றும் கவுரவக் குறைச்சல் இல்லை.
மனைவி கோபப்பட்டால் கணவன் பொறுமை காப்பதில் ஒன்றும் தன்மானப் பிரச்சினை இல்லை. உங்களிடையே மூன்றாம் நபர் தலையிட்டு கலகத்தை உண்டுபண்ண விட்டுவிடாதீர்கள்.
உங்கள் பிள்ளைகளுக்குள் சண்டை ஏற்பட்டால், அவர்களை சமாதானப்படுத்தி அன்பை வளரச் செய்யுங்கள்.
அதைவிட்டு, ஒரு பிள்ளையைப் பாராட்டியும் ஒரு பிள்ளையைப் பழித்தும் பேசத் தொடங்கிவிட்டால், அவர்களுக்குள் பகையை உருவாக்கி உங்கள் குடும்பத்திற்கு நீங்களே சரிவை ஏற்படுத்துகிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
கோபத்தை வளரச் செய்தால் அது உள்ளங்களைப் பிரிக்கும். உறவுகளை அறுக்கும். பகையை வளர்த்துக் குடும்பங்களைத் தகர்க்கும்.
எனவே எப்போதும் நல்லவற்றைச் செய்யுங்கள். கோபத்தைத் தணியச் செய்வது மிகப்பெரிய தர்மம். அதனால் அன்பு பெருகும். உறவுகள் தழைக்கும். நன்மைகள் பிறக்கும்.
சுக்ரீவன் நல்லவன்தான். ஆனால் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவன். கள் மயக்கத்தால், தான் வாக்கு கொடுத்திருந்தபடி குறித்த காலத்தில் ராமனுக்கு உதவ வானரப்படையுடன் அவன் வந்து சேரவில்லை.
எனவே ராமன் கோபம் கொள்கிறான். சுக்ரீவன் நன்றி மறந்தான் என்று எண்ணிய ராமன், தன் தம்பி லக்குவனை அனுப்பி கிட்கிந்தையைக் கலக்கச் சொல்கிறான்.
வாலியைக் கொன்ற அம்பு என்னும் கூற்றம் இங்குதான் இருக்கிறது என்று எச்சரிக்கை செய்யவும் சொல்கிறான்.
சூழ்நிலையை உணர்ந்த அனுமன், அதைத் தணிப்பதற்காக, தாரையை வானர மகளிருடன் அனுப்பி லக்குவனின் வழியை மறித்து நிற்க வைக்கிறான்.
எதிரே நின்ற தாரையின் கோலம் ‘பார்குலா முழுவெண் திங்கள் பகல் வந்த படிவம்’ போல ஒளியிழந்து காணப்படுகிறது. அதைக் கண்ட லக்குவனுக்குச் சுக்ரீவன் மீதிருந்த சீற்றம் தணிகிறது.
தாரையின் விதவைக் கோலம் கண்டதும் ‘இளையராம் எனை ஈன்ற தாயர்’ என்று தன் தாய்மார்களை எண்ணிக் கண் கலங்கினானாம் லக்குவன்.
அனுமனின் ஏற்பாட்டினால் என்ன அருமையான மாற்றம்! சற்று சிந்தியுங்கள்! கோபமூட்டுவதை நிறுத்திடுங்கள்.
உறவுகளை வளர்த்திடுங்கள். அதுதான் வாழ்வெனச் சொல்லுகிறேன். நீங்கள் வாழ்வாங்கு வாழ்ந்திடச் சொல்லுகிறேன்.