விழி கொண்ட உணர்வுகள்

பரபரப்பான காலை பொழுது, வேக வேகமாக எழுந்து குளித்துவிட்டு அலுவலகத்திற்கு தயாராகி செய்தித்தாளை கையில் எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தான் மென்விருகன். அவனுடைய தோழர்களான கதிரேசனும், கார்த்திக்கும் கையில் மது பாட்டிலுடன் கார் கேமை (Car Game) விளையாடிக்கொண்டிருந்தனர்.

“டேய்! உன்னை சேஸ் (CHASE) செய்ய போகிறேன் பார்!” என்று கூறிக்கொண்டு கார்த்திக், ஜாய் ஸ்டிக்கை (JOY STICK) மெல்ல நகர்த்த வண்ணத்திரையில் கார் வேகமாக சென்றது. “உன்னை விடமாட்டேன்” என்று கூறிக்கொண்டு வேகமாக காரை செலுத்தினான் கதிரேசன்.
இவை அனைத்தையும் ஏதோ யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் மென்விருகன். ஆம், அவனுக்கு இன்று அலுவலகத்தில் விழிப்புணர்வை பற்றிய குறும்பட போட்டிக்கான தேர்வு (SHORT FILM CONTEST SELECTION). என்ன செய்ய போகிறோம் என்று யோசித்துக்கொண்டே அந்த கார் கேமை நன்றாக பார்த்துக்கொண்டிருந்தான்.
அப்பொழுது “காலையிலே கையில் மது பாட்டிலா!!” என்று திட்டிக்கொண்டு வந்து அமர்ந்தான் வான்மித்ரன். என்னடா இவன் யோசனையுடன் இருக்கிறான் என்று கேட்டுக்கொண்டு விருகனை மித்ரன் நோக்க, ஏதோ மச்சான் யோசனையில் இருக்கிறான். என்ன என்று தான் தெரியவில்லை” என்று கூறி சிரித்துக்கொண்டு கதிரேசன் மதுவை அருந்தியபடி கேமை விளையாடினான்.

“ஹேய் டோன்ட் ட்ரிங்க் வொய்ல் டிரைவிங்க்” (DON’T DRINK WHILE DRIVING) என்றான் வான்மித்ரன். ஆம், அவன் கார் கேமை குடித்துக்கொண்டு விளையாட, மித்ரன் ஏற்படுத்திய விழிப்புணர்வு மென்விருகனை புத்துணர்ச்சி கொள்ள செய்ய தவறவில்லை. வேகமாய் எழுந்து அனைவருக்கும் “பை” (BYE) சொல்லிவிட்டு அலுவலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஆம், வீட்டில் இருக்கும் பொழுதே இப்படி விழிப்புணர்வை பற்றி தெரிந்துக்கொள்ள முடியுமென்றால் வெளி உலகத்தில் எவ்வளவு இருக்கும் என்று தனக்குள்ளே நினைத்துக்கொண்டு பைக்கை மறந்து நடைப்பயணம் மேற்கொண்டான் மென்விருகன்.

காட்சி 1:
“ஹேய் புரிந்துக்கொள்ளுடி. நான் உனக்கு சரியான ஜோடி அல்ல. ஏனென்றால், நான் வேலையில்லா பட்டதாரி. உன்னை திருமணம் செய்துக்கொள்ள தகுதியற்ற ஒருவனாய் நான் நிற்கிறேன்” என்று அலைபேசியில் பேசிக்கொண்டே நடந்தான் ஒருவன். அவள் ஏதோ சொல்ல மீண்டும் இவன் குறிக்கிட்டு பேசினான். முகம் தெரியாத அந்த இருவரின் வார்த்தைகளை கேட்டுக்கொண்டே நடந்தான் மென்விருகன். “ஒருவேளை உன்னை நான் பிரிந்தால் செத்துவிடுவேன்டி” என்று கூறிக்கொண்டே சாலையை கடக்க, ஒரு கார் வேகமாக வந்து அவன் அருகில் சட்டென்று ப்ரேக் (Brake) அடித்து நின்றது. அவன் (காதலன்) உயிர் நாடி துடிப்பு பதட்டத்தில் உறைந்து போனது.

“டேய் சாவு கிராக்கி. காலையிலேயே, நான் தான் கெடைச்சேனா” என்று கார் ஓட்டி வந்தவன், வசைபாடிவிட்டு காரை எடுத்து சென்றான். “காதலி இல்லை என்றால் இறந்துவிடுவேன் என்று முடிவெடுத்தவன், பெற்றோரை பற்றி ஒரு நிமிடம் கூட நினைக்கவில்லையே!” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான் மென்விருகன். “இந்த காலத்தில் நன்றாக படித்தும் வேலையற்று சாலையில் செல்ல யார் காரணம்? ஏன் இந்த அவல நிலை?” என்று நினைத்துக்கொண்டு மீண்டும் நடந்தான் மென்விருகன்.

காட்சி 2:
கொஞ்ச தூரம் நடந்து சென்றுக்கொண்டிருக்க, அப்பொழுது திடிரென்று இரண்டு பைக்குகள் வேக வேகமாக நேர் எதிரில் மோதும் தோரணையில் வந்து நின்றது. “டேய்! பார்த்து வரமாட்டாயா?” என்று முதலில் வந்தவன் திட்ட எதிரில் இருந்த பைக் ஓட்டியும் “நீ தான் வேகமாக வந்தாய்!” என வசைபாடினான். இருவரும் மாற்றி மாற்றி திட்டிவிட்டு வேகமாக பைக்கை எடுத்துக்கொண்டு அலுவலகம் விரைந்தனர்.

“ஹூம், இவன் யாரென்று அவனுக்கு தெரியாது. அவன் யாரென்று இவனுக்கு தெரியாது. எதற்கு இந்த வீண் வாதம்? அதும் காலையிலே” என்று மனதிற்குள்ளே கேள்விகளை கேட்டுக்கொண்டான் மென்விருகன். “ஒருவேளை இந்த மோதலின் போது அந்த இரண்டாவது நபர், தன்னுடைய மேனேஜராக (MANAGER) இருந்தால்! இப்படி அவனால் திட்டிவிட்டு செல்ல முடியுமா? இந்த மோசமான சம்பவம், இந்த நாள் முழுவதும் அவர்களை மன உலைச்சலுக்கு ஆளாக்கும் அல்லவா! ஏன் இந்த நிலை உருவாக அவர்கள் காரணமாகிறார்கள். இருவரும், சிரித்துக்கொண்டே சென்றால், இந்த சம்பவமே நடந்து இருக்காதே. நாளும் மகிழ்ச்சியாக செல்லுமே” என்று நினைத்துக்கொண்டு மீண்டும் நடந்தான் மென்விருகன்.

காட்சி 3:
அவன் நடந்து சென்றுக்கொண்டிருக்க, “அண்ணா பசிக்குது, சாப்பிட பணம் தாருங்கள்” என்று ஒரு சிறுவன் கெஞ்சினான். “நான் உனக்கு எதாவது சாப்பிட வாங்கி தரட்டுமா?” என்று விருகன் அவனிடம் கேட்க, “வேண்டாம் அண்ணா. நீங்கள் பணமாய் தாருங்கள்” என்று முரண்டு பிடித்தான். அப்பொழுது கையில் பீட்சாவுடன் இருந்த ஒருவன், “பார்த்திங்களா தம்பி! இவனுக்கு எவ்வளவு திமிரு என்று பார்த்திங்களா! சாப்பாடு வாங்கி தரனு சொன்னா, நாமகிட்டேயே பணம் கேட்கிறான்” என்று மோசமாக பேசினான்.

“அய்யா! அவன் ஒன்றும் திமிறின் காரணமாக பணம் கேட்கவில்லை. நம்மை போன்றவர்களுக்கு பீட்சா பர்கர் என்று சாப்பிட ஆசை இருக்கும் பொழுது, ஏன் இந்த சிறுவனுக்கும் ஆசை இருக்க கூடாது?” என்றான் மென்விருகன். அந்த பணக்கார முதலை அமைதியாக நின்றது. “ஏன் ஆசை என்பது நம்மை போன்றவர்களுக்கு மட்டும் தான் இருக்க வேண்டுமா?” ஏழையாய் பிறந்தது என்ன இவன் குற்றமா?’ என்று அவரை பார்த்து சொல்லால் மூக்கை உடைத்தான் மென்விருகன். பின், அந்த சிறுவன் கையில் ஒரு 1000 ரூபாய் நோட்டை தினித்து அவன் கிளம்ப, அந்த சிறுவன் அன்பால் ஒரு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டான்.

மென்விருகன் மனதிற்குள்,

“கதை தயாராகிவிட்டது எனக்கு. ஆம்,
I. வாகனம் ஓட்டும் பொழுது மது அருந்துதல் குற்றம்,
II. பெற்றோர் பற்றி கவலைப்படாத சுய நல காதல்,
III. சாலையில் போனை உபயோகிப்பது தவறு,
IV. அலுவலகத்திற்கு செல்லும் நேரத்தில் தேவையற்ற சண்டை,
V. படித்தவர்களின் வேலையற்ற அவல நிலை,
VI. பணக்காரர்களின் எண்ண ஓட்டம்,
VII. ஏழைகளின் நிறைவேறாத ஆசை,

என அனைத்தையும் கொண்டு மனதிற்குள் ஒரு கதையை உருவாக்கினான் மென்விருகன். “இவர்கள் அனைவருக்கும் ஒரே நிரந்தர எதிரி..அது பணம் தான். ஆம்,

1. பணம் இல்லாமல் தவித்த ஒருவனே காதலியை நினைத்து கண் கலங்கி கல்லறையை
அடைய நினைத்தான்.
2. அலுவலகத்திற்கு தாமதமாக சென்றால், சம்பளம் குறைந்துவிடும் (LOP – LOSS OF PAY)
என்ற எண்ணத்தில் முகம் தெரியாத இருவர் சண்டை போட்டு நகர்கிறார்கள்.
3. பணம் இல்லாத காரணத்தால் தன்னுடைய விருப்பத்திற்காக ஒரு சிறுவன் இரவல்
கேட்டு அசிங்கப்படுகிறான்.

மூன்று சம்பவங்களுக்கும் நிரந்தர எதிரி பணம் மட்டுமே என்று நினைத்துக்கொண்டு அலுவலகத்தின் வாசலை அடைந்தான் மென்விருகன். “விருகா! பைக் என்னாச்சு” என்று கேட்ட அவன் மேனேஜர் கடிகாரத்தை பார்த்தார். “அடக்கடவுளே, மணி ஆகிவிட்டதா என்று கூறிவிட்டு வேகமாக கார்டை (ACCESS CARD) ஸ்வைப் (SWIPE) செய்து உள்ளே நுழைந்தான் மென்விருகன். காரணம், அவனுக்கும் வாழ பணம் தேவையல்லவா.

“NO ONE PERFECT IN THE WORLD
MONEY PLAY A PERFECT GAME IN ALL LIFE”

மாலைப்பொழுது,

மென்விருகன், மற்றும் அவனுடைய அலுவலக பணியாளர்கள் கூட, அனைவரும் அவர்களுடைய மனதில் எழுந்த விழிப்புணர்வு பற்றிய எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். ஆனால், மென் விருகனின் கதை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. “அருமையான கதை விருகா. ஆனால், எதாவது வித்தியாசமான முடிவை தந்தால், இன்னும் நன்றாக இருக்கும்” என்று குழுவின் தலைவர் கூற, “நான் யோசித்து நாளை சொல்கிறேன்” என்று கூறி விடைபெற்றான் மென்விருகன்.

“என்ன மாதிரியான முடிவை தருவது” என்று யோசித்துக்கொண்டே வீட்டை நோக்கி மீண்டும் நடந்தான் மென்விருகன். அப்பொழுது விளையாட்டு திடலில் கண்ட அந்த சம்பவம், அவன் கண்களை கலங்க செய்தது. வேக வேகமாக போனை எடுத்து தன்னுடைய குழு தலைவருக்கு அழைப்பை விடுத்தான். அவர் ஏற்று, “ஹலோ” என்றார்.
“சார், கதைக்கு முடிவு தயார்” என்றான். “அப்படியா. என்ன?” என்று ஆர்வமாக கேட்டார் அந்த குழு தலைவர் அப்ரார் (Abrar).

“ஹீரோ அலுவலகம் முடிந்து மீண்டும் வீட்டிற்கு செல்கிறான். அப்பொழுது, காலையில் இரவல் கேட்டு 1000 வாங்கிய சிறுவனை கால்களில் புதிய காலணிகளுடன் (Shoe) மைதானத்தில் ஓடுவதை காண்கிறான். ஆம், காலையில் இரவல் கேட்டு கெஞ்சியது உணவிற்காக அல்ல. தன்னுடைய இலட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கத்துடனே. அதனால், அந்த சிறுவன், கிடைத்த 1000 ரூபாயை கொண்டு ஒரு அழகிய ஸ்போர்ட்ஸ் சூ (Sports Shoe) வாங்கி தன்னுடைய இலட்சியத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான். இவ்வாறு கதை முடிகிறது” என்று மென்விருகன் புத்துணர்ச்சியுடன் கூற, “அருமையாக உள்ளது விருகா” என்று போனிலே பாராட்டினார் அப்ரார்.

ஆனால், மென்விருகனின் கதை இறுதி நொடியில் தவிர்க்கப்பட்டு சீனியர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

“பணம் ஆடிய விளையாட்டை சொல்ல சென்று
இறுதியில் திறமை மறைக்கப்பட்டு தோற்றான்” மென்விருகன்.

இருப்பினும், அவன் கதையை கூறிய பொழுது கிடைத்த கரகோஷ ஒலியை, வெற்றியின் முதல் படி என்று எண்ணிக்கொண்டு தொடர்ந்து கதைகளை எழுத தொடங்கினான் மென்விருகன்.

முகம் தெரியா நண்பர்கள் தரும் ஊக்கமும், ஆறுதலும் என்றுமே உடன் இருப்பவர்கள் தருவது இல்லை.

மீண்டும் சந்திப்போம்….

எழுதியவர் : பாலகார்த்திக் பாலசுப்பிர (26-Feb-17, 10:57 pm)
சேர்த்தது : Balakarthik Balasubramanian
பார்வை : 390

மேலே