கைலாய நந்தி

கைலாய நந்தி
~~~~~~~~~~~~~~~~
கைகூப்பிநின்றேன் கைபிடிப்பாய்என்
கைலாய நந்தி - சிவன்
கால்பிடித்தேநான் கரைவரக்கேட்பேன்
காப்பாய்நீ நந்தி

ஆலயமுகப்பில் ஆனந்தமாய்நீ
அமர்ந்திருப்பாய் நந்தி - சிவன்
அடிபணிந்திடநான் அழுத்திருக்கும்நிலை
எடுத்துரைப்பாய் நந்தி

ஆழியிலலையும் ஓர்துளிநானென
அறிந்திடச்செய் நந்தி - இவன்
அமைதியெனும்புது ஆலயம்கண்டிட
அருகினில்வா நந்தி

உழல்வதுநானிலை ஊழ்வினையென்றே
உணர்த்திடவா நந்தி - நான்
உமையொருபாகனின் ஒருதுளிபாகமென்
றுறைந்திடச்செய் நந்தி

சூழ்வினையாவையும் சுகமெனப்பூசிச்
சுமப்பவன்நான் நந்தி - நிதம்
சுழுமுனைநாடித் தவமேபுரிய
துணையருள்வாய் நந்தி

நானிலமதிலே நாற்புரம்மதிலே
நடுவினில்நான் நந்தி - இனி
நான்தொழசிவனின் நிழல்தனைக்காட்டு
நல்லவனே நந்தி

நாசியின்சுவாசம் நாயகனுக்கும்
நகையாமோ நந்தி - அதில்
நானோரிழையாய் நாதனின்தோள்தொட
நன்மைசெய்வாய் நந்தி

வேந்தன்பட்டியில் வடிந்திடும்நெய்யில்
வசித்திருக்கும் நந்தி - சிவன்
விரும்பியநந்தனின் வேண்டுதல்கேட்டு
விலக்கியதிரு நந்தி

அக்னிரூபன் ருத்ரன் தூயவன்
ஆனவனே நந்தி - உனக்
கருகம்புல்லணி விதேனெனக்கு
அனுமதிதா நந்தி

அழகியநந்தி அடியேந்தமிழை
அணிந்துகொண்டாய் நந்தி - தினம்
அண்ணாமலையை ஐந்தெழுத்தோதிட
அருளியபேர் நந்தி

வரந்தந்தாய்நீ வந்தனைசெய்தேன்
வல்லவனே நந்தி - நான்
வளமாய்ச்சிவனை வழிபடவேநீ
வழிவிட்டாய் நந்தி

எழுதியவர் : மீ.மணிகண்டன் (27-Feb-17, 10:28 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 3689

மேலே