தாயிழந்த பெண் குழந்தைக்கு தந்தையின் தாலாட்டு
உனக்கு தாலாட்டு பாடவந்தேன்
தந்தை நானடி கண்ணே
என்னையும் உன்னையும் விட்டு விட்டு
இறைவனடி சேர்ந்துவிட்டாள் உன்
தாயடி கண்ணே இதை நீ அறியாய்யடி
என் செல்லப் பெண்ணே -இந்த உன்
தந்தை மடியை மெத்தையடியாய் நினைத்து
உன் அம்மா மடியென்று எண்ணி
கண்ணுறங்காயோ , கண்ணுறங்காயோ
முற்றத்தின் சாளரத்தில் வெள்ளி நிலவு
உன் அம்மா அனுப்பிவைத்தாளோ உனக்காக
தண்ணிலவாய்க் காயுது உன் மேனியில் பரவி
தென்றலும் வந்துனக்கு தாலாட்டு பாட வந்ததுவோ
கண்ணே கண்மணியே எந்தன் சின்னிக் கண்ணே
வட்ட வட்ட உன் சிறு விழிகளில் இன்னும்
தூக்கம் வந்து சேரவில்லையோ
கண்ணுறங்காய்க் கண்ணே கண்ணுறங்காய்
காலமெல்லாம் தந்தை நான் உனக்கு
தாயாய் தந்தையாய் காத்து நிற்பேன்
கவலை உனக்கில்லை கொஞ்சும் சிலையே
நான் உனக்கு என்றும் அம்மையப்பனே
கண்ணுறங்காய் கண்ணே கண்ணுறங்காயோ
சிங்காரக் கண்ணே கண்ணுறங்கு
ஆரி ஆராரோ ஆரி ஆராரோ
ஆரி ஆராரோ ஆரி ஆரி
ஆரி ஆராரோ ஆரி ஆரி