விருட்சம் கொண்ட விதைகள் விடியலின்றி வாழாது - தரவு கொச்சகக் கலிப்பா
விருட்சமான விதைகளுமே விடியலின்றி வாழாது .
பருவத்தே செய்கின்ற பயிர்கள்தான் பலன்கொடுக்கும் .
கருக்கொண்ட செந்நெல்தான் கதிராகும் இவ்வுலகில்
உருவாகும் விருட்சங்கள் உருவாக்கும் எதிர்காலம் !
மனிதத்தைப் பேணிடுங்கள் மலரட்டும் புதுவாழ்வு .
புனிதத்தை விதைத்திடுங்கள் புலரட்டும் விடியலுமே .
இனியாவும் நற்காலம் இறுதிவரைத் தொடரட்டும்
தனிமரமோ தோப்பாகாத் தத்துவத்தைத் தெளிவோமே !
சோலையிலே பூக்களெல்லாம் சொல்லுகின்ற செய்தியினைக்
காலையிலும் கண்விழித்தே கண்டிடலாம் இதமாக
மாலையிலும் மனங்குளிர மயங்கிடுவோம் மலர்கண்டு .
சாலையிலே இருமருங்கும் சத்தான மரம்வைப்போம் !
விடியலினை நோக்கியுமே விதைகளுமே வளர்ந்துவரும்
மடிதலுமே வேண்டாமே மறுக்காதீர் நல்வாழ்வை
இடிமின்னல் எல்லாமே இயற்கையதன் ஓர்அங்கம்
மிடிதனையும் களைந்திடுவீர் மிளிரட்டும் விருட்சங்கள் !
பெற்றோரைக் காத்தலுமே பெருமைமிகு செயலன்றோ
உற்றோர்க்கு உதவிதனை உள்ளன்பால் செய்திடுங்கள்
கற்றவர்கள் இக்கருத்தைக் காசினியில் நிலைநிறுத்தப்
பெற்றிடலாம் விடியலுமே பேர்சொல்லும் வாழ்வியலும் !
வாழ்க்கைக்கு வரமாக வளமான விடியலையும்
காழ்ப்புணர்ச்சித் தீக்கதிரால் கறைபடவும் வைக்காதீர்
பாழ்படுமே விதைகளுமே பாதுகாத்தல் இல்லையெனில்
வீழ்ந்திடவும் செய்யாதீர் விருட்சமாகும் விதைகளையும் !!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்