பம்பரம்

கொஞ்சம் உருண்டையாய் இருந்து படிப்படியாய் கூம்புபோல் குறைந்து கீழே கூரான ஆணி உடைத்து, முறுக்குக் கயிறு கொண்டு சுற்றி சுண்டி விட்டால் சுற்றும்... வெகு நேரம் சுற்றுவதைப் பார்க்கலாம், கையிலும் ஏற்றிக் கொள்ளலாம்... கொஞ்சம் 'குறு குறு' என்று இருக்கும்....

நான் எட்டு வயது(1959 வருடம்)) இருக்கும் போழுது அதை வைத்துக் கொண்டு பித்து பிடித்தது போல் ஆடிக் கொண்டிருப்பேன்... நாள் முழுக்க. நிறைய நண்பர்கள், பெரிய காம்பவுண்டில் நிறைய தனித் தனி வீடுகள், வீட்டு வாசலில் விளையாட நிறைய இடம், வாசம் கேரளா எர்ணாகுளத்தில் புல்லேப்படி...

ஒரு வட்டமிட்டு அதனுள் குத்த வேண்டும்... அங்கேயே வட்டதுக்குள் தங்கிவிட்டால், மற்றவர் நம் பம்பரத்தை அவர்கள் பம்பரத்தால் கொத்தி வெளியே எடுப்பர்... எல்லாம் வெளியே வந்தவுடன், எல்லோரும் அப்பீட்டு எடுக்க வேண்டும்... அப்பீட்டு என்றால் பம்பரத்தை தரையில் சுற்ற விட்டு கயறு கொண்டு தூக்கிப் பிடிக்க வேண்டும்.. யார் கடைசியில் பிடிக்கிறார்களோ அவர் பம்பரம் மீண்டும் வட்டதுக்குள்.. குத்து வாங்கும் பம்பரம் சேதமடையவோ, உடையவோ வாய்ப்பு உண்டு.. யாரும் விளையாட இல்லையென்றால் நான் மட்டும் வாசலில் பம்பரம் விட்டுக் கொண்டிருப்பேன்...

சதா சர்வ காலமும் இதே வேலையாய் நான் இருக்க, எவ்வளவோ சொல்லிப் பார்த்த அம்மா, கோபம் கொண்டு, பம்பரத்தை தூக்கி மச்சில் போட்டு விட்டாள்.. மச்சு என்பது எல்லா கேரள விட்டிலும் இருக்கும். நம் இக்கால லாஃப்ட்.. ஆனால் பெரிசாக அறை அளவு இருக்கும்... தலைக்கு மேல். அதில் வேண்டாத பொருட்கள் போட்டு வைப்பர்... பரண் என்பது நம்ம ஊரில்.

உடனே பம்பரத்தை எடுத்துக் கொடுக்கச் சொல்லி அழுது அடம் பிடிக்க ஆரம்பித்த நான், நிறுத்தவில்லை. சலிப்படைந்த அம்மா ஏணி கொண்டுவரச் சொல்லி, மச்சில் ஏற என்னை ஏணியைக் கீழே பிடித்துக் கொள்ளச் சொன்னாள்... மெல்ல மெல்ல அம்மா மேலே ஏறி, உச்சியை அடைய எனக்கு சந்தோஷம் தலைக்கேறியது... ஏணியை விட்டு விட்டு, 'ஹையா... ஹையா பம்பரம் என்று வாசலுக்கு ஓடினேன்...." ஏதோ சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க தரையில் வழுக்கி ஏணி சர சர வென்று விழ, அம்மாவும் "ஆ....." என்று கத்திக் கொண்டு கீழே விழ, அக்கம் பக்கம் உதவியுடன் அம்மாவை ஆசுபத்திரிக்கு கூட்டிச் சென்று காலில் எலும்பு முறிவுக்கு கட்டுபோட்டு அழைத்துவந்தார்கள்...

மூன்று மாதம் தவழ்ந்து கொண்டே எங்களுக்கு உணவு சமைத்தாள்.. நானும் கொஞ்சம் சமைக்கக் கற்றுக் கொண்டேன்...

இன்றும், என்றும் எனக்கு பம்பரம், ஏணி என்றால் உடம்பு நடுங்கும்...
---- முரளி

எழுதியவர் : முரளி (2-Mar-17, 8:49 am)
சேர்த்தது : முரளி
Tanglish : pambaram
பார்வை : 324

மேலே