ஆவதும் பெண்ணாலே - வெண்கலிப்பா
ஆவதுமே பெண்ணாலே அழியாத நிலைபெறவே
காவலரும் பெண்டிரன்றோ காலத்தால் பேணிடுவர்
பாவலரும் பெண்களிலே பலருண்டு வையகத்தில்
மாவரங்கள் பெற்றவராம் மண் .
பெண்மையினைப் பேணுவதில் பெரும்பங்கு வகிப்பவர்கள்
உண்மையினை இவ்விடமே உரையுங்கள் அழுத்தமாக
கண்இமையைப் பேணுதல்போல் கருத்தாகப் பேணுகின்ற
மண்ணுலகின் தெய்வத்தை மாந்து.
பிறந்தவீடு பெண்டிர்க்குப் பிசகாது பெருமைதரும் .
உறவாடும் இரத்தபந்தம் உயிராக மதித்திடுவர் .
மறவாது பெண்ணினத்தை மங்கலமாய் நடத்துவராம் .
சிறந்தோங்கும் பெண்மையுமே சீர் .
புகுந்தவீடு பெண்டிர்க்கு புகழ்சேர்க்கும் வீடன்றோ ?
தகுந்தவிடம் கிடைத்துவிட்டால் தரத்திற்கோ பஞ்சமில்லை .
வகுத்தவழி சிறந்துவிட்டால் வாழ்வுநெறி அதுவன்றோ ?
புகுந்தவீடும் பெண்மைக்குப் பூத்து .
காலையிலே எழுந்தவுடன் காத்திடுவாள் குடும்பத்தை .
வேலையிலே செல்லுமிடம் வென்றிடுவாள் பல்லோர்முன்.
பாலையிலே நின்றாலும் பசுந்தளிராய் ஒளிர்ந்திடுவாள் .
மாலையிலே வந்தபின்னும் மாற்று .
பெண்மையினைப் பேணுதலில் பெண்களுமே பெரும்பங்கை
வெண்மதியைப் போன்றவராய் வெல்கின்றார் ஈங்கின்றே .
புண்படாது பெண்மையினைப் புன்னகையால் பேணுகின்றார் .
விண்ணிலுள்ள கதிரோன்போல் வித்து .
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்