பொம்மைகள்
பொம்மைகள் !
கவிதை by பூ. சுப்ரமணியன்
இறைவன், ஆண் பெண்
இருவர் உணர்வுகளை
இணைத்துப் படைத்தான்
பேசும் மனித பொம்மைகள் !
மனிதனோ மண்ணைக் குலைத்து
வண்ணங்கள் பல தீட்டி
கற்பனை கலந்து படைத்தான்
பேசாத மண் பொம்மைகள் !
பேசாத மண் பொம்மைகளும்
பேசும் நம்மிடம் மௌனமாக
ஆசையே துன்பத்துக்குக் காரணம்
ஓசையில்லாமல் பேசும்
புத்த பகவான் பொம்மை !
தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
அன்புக் கட்டளையிடும்
பேசும் ஏசுநாதர் பொம்மை !
அஹிம்சை சத்தியாக்கிரகம்
புன்னகை மாறாமல் பேசும்
சத்திய சோதனை தந்த
மகாத்மாகாந்தி பொம்மை !
வாடிய பயிரைக் கண்டு
வாடும் வள்ளல் பெருமான்
எவ்வுயிரும் தம்முயிர்போல்
நினைக்கச் சொல்லும்
வள்ளலாரின் பொம்மை!
தனி ஒருவனுக்கு உணவு
இனி இல்லை என்றால்
ஜெகத்தினை அழித்திடுவேன்
முழக்கமிட்ட பாரதி பொம்மை !
காவியங்களையே நம்மிடம்
கண்முன்னே நிறுத்தும்
ராமர் பட்டாபிஷேகப் பொம்மை
கண்ணன் கண்ணகி பொம்மைகள் !
நிஜத்தைப் பார்க்க முடியாமல்
நவராத்திரி திருநாளில்
கொலுவில் வீற்றிருக்கும்
பேசும் கொலுபொம்மைகளின்
நிழலைப் பார்த்துப் பேசி
நாமும் பரவசம் கொள்வோம் !

