இரும்புச் சீமாட்டி
"இரும்புச் சீமாட்டி" என்று அழைக்கப்படும் ஈபில் கோபுரம் பிரெஞ்சு புரட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி 1889ஆம் ஆண்டு நடந்த கண்காட்சிக்காக அமைக்கப்பட்டது. முழுவதும் இரும்பினாலும் எக்கினாலும் கட்டப்பட்ட இதை வடிவமைத்தவர் "அலெக்சாண்டர் குஸ்தாவ் ஈபில்" எனும் கட்டடக் கலைஞர். ஆரம்பத்தில் இதைக் கட்டுவதற்குப் பலத்த எதிர்ப்பு இருந்தது.
பாரிஸ் நகரில் "சாம்ப் - டி - மார்ஸ்" எனுமிடத்தில் மேற்கு முனையில் அமைந்துள்ள இதன் உயரம் 300 மீட்டர்கள். இதன் மேல் ஏறி நின்று பார்த்தால் 80 கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். இந்த கோபுரத்தை நான்கு இரும்பு தூண்கள் தாங்கி நிற்கின்றன. இவை ஒரு பெரிய வில் வளைவு மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. 9 முதல் 14 மீட்டர் ஆழமான அஸ்திவாரமும் 26 சதுர மீட்டர் பரப்பளவும் கொண்ட மேடையின் மீது இந்தத் தாங்கு தூண்கள் கட்டப்பட்டுள்ளன. அடித்தளத்திலிருந்து 180 மீட்டர் உயரத்தில் நான்கு தூண்களும் ஒன்றாக இணைந்து ஒரே தண்டாக உருப்பெறுகிறது. மற்ற இரும்புச் சட்டங்களின் மொத்த எடை 6000 டன்கள். 15000 இரும்புச் சட்டங்களும், 250000 குடையாணிகளும் பயன்படுத்தப் பட்டிருக்குகின்றன.
இந்த அமைப்பு முழுவதும் பின்னல் தட்டி போல் அமைந்திருப்பதால் எவ்வளவு பலத்த காற்று அடித்தாலும் 10 சென்டிமீட்டர் அளவே அசைந்து ஆடும்.
இதில் 3 பார்வையாளர்கள் மேடை அமைக்கப்பட்டுள்ளது. முதல் மேடை 56 மீட்டர் உயரத்திலும், இரண்டாவது மேடை 115 மீட்டர் உயரத்திலும், மூன்றாவது மேடை 270 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உச்சியில் ஒரு வானிலை ஆய்வுக்கூடமும் ஒரு உணவகமும் உள்ளது. இந்த கோபுரத்தின் உச்சியில் 20 மீட்டர் உயரமுள்ள தொலைக்காட்சி ஆன்டினா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு ஒரு சினிமா அரங்கம். ஒரு வரவேற்புக்கூடம் ஒரு தபால் நிலையம் ஒரு உணவகம் முதலியன முதல் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நிலையில் மேலும் ஒரு உணவகம் திறந்து வைக்கப்பட்டது.
''பாரிஸின் பெருமை" என்று குறிப்பிடப்படும் இந்த கோபுரத்தை வடிவமைத்த ஈபில் தான் அமெரிக்க சுதந்திர தேவியின் சிலையையும் வடிவமைத்தவர்...