குதூகலமான குழந்தைகள் அறை
இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி, அவர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் அறையை வடிவமைப்பது என்பது சவாலான விஷயமே. குழந்தைகள் தங்கள்
அறையைத் தூங்குவதற்காக மட்டும் பயன்படுத்துவதில்லை. விளையாடுவது, படிப்பது, நண்பர்களைச் சந்திப்பது, கனவு காண்பது என எல்லாவற்றுக்கும் தங்கள் அறையைத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். குழந்தைகளின் விருப்பங்கள் அடிக்கடி மாறும் தன்மையுடையவை என்பதால் அவர்களுக்கான அறையை வடிவமைப்பதில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகளின் அறையை வடிவமைப்பதற்கான சில வழிகள்:
நிறம் முக்கியம்
அறையின் சுவரில் ஆரம்பித்து கட்டில், படிக்கும் மேஜை போன்ற அனைத்து அறைக்கலன்களையும் தேர்ந்தெடுக்கும்போது அவற்றின் நிறங்களில் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கலாம். சிவப்பு - பச்சை, நீலம் - ஆரஞ்சு, மஞ்சள் - பச்சை என இரண்டு கான்ட்ராஸ்ட் வண்ணங்களில் அவர்களின் அறைக்கலன்களை வடிவமைக்கலாம். பளிச் நிறங்களைத் தேர்ந்தெடுப்பதால் அவர்கள் அறையில் இருக்கும்போது உற்சாகமான உணர்வைப் பெறுவார்கள்.
கார்ட்டூன் சுவர்கள்
சுவர் ஓவியங்கள் குழந்தைகளின் அறையை அலங்கரிப்பதற்கான எளிய வழி. அவர்களுடைய மனதுக்குப் பிடித்த கார்ட்டூன்களைச் சுவர்களில் வரைந்தோ, சுவரில் மாட்டியோ வைக்கலாம். ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ள குழந்தைகளின் கைவண்ணத்தைச் சுவரில் காட்டச் சொல்லலாம். தங்கள் அறையை வடிவமைத்த திருப்தி அவர்களுக்குக் கிடைக்கும். ஸ்டென்சில்களாலும் சுவர்களை அழகாக்கலாம்.
அடுக்கு கட்டில்கள்
ஒரே அறையை இரண்டு குழந்தைகளும் பகிர்ந்துகொள்வதாய் இருந்தால், அடுக்கு கட்டில்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இது இடத்தை மிச்சப்படுத்துவது மட்டுமில்லாமல் குழந்தை களுக்குப் பகிர்தலின் அருமையையும் உணர வைக்கும்.
பிரத்யேகமான தீம்கள்
குழந்தைகளின் ரசனைக்கேற்ற தீம்களிலும் அவர்களின் அறையை வடிவமைக்கலாம். உதாரணமாக, உங்கள் குழந்தைக்குப் பயணம் செய்வது பிடிக்கும் என்றால், டிராவல் தீமை வைத்தே அவர்களின் அறையை வடிவமைக்கலாம். பயணம் மட்டுமல்லாமல் விலங்குகள் சாம்ராஜ்ஜியம், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் என உங்கள் குழந்தையின் படைப்பாற்றலை அதிகரிக்கும் தீம்களிலும் அறையை வடிவமைக்கலாம்.
பொம்மை அலமாரிகள்
குழந்தைகள் தங்களிடம் இருக்கும் பொம்மைகளை அனை வரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதனால் அதற்கு ஏற்றபடி பொம்மைகளை அடுக்கிவைப்பதற்கான அலமாரிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அலமாரியில் குழந்தைகளையே அவர்களுக்குப் பிடித்தமாதிரி பொம்மைகளை அடுக்கச் சொல்லாம். இதனால், பொம்மைகளை எப்படி அடுக்குவது என்ற உங்கள் குழப்பத்தைத் தவிர்க்கலாம்.
ஜன்னலும், வெளிச்சமும்
குழந்தைகள் அறையில் நல்ல காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஜன்னல் இல்லாத அறையைக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டாம். போதுமான காற்றுவசதி இல்லையென்றால் அவர்களின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்படும். காற்றோட்டமும், வெளிச்சமும் இருந்தால் அவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழலை அது உருவாக்கும்.
மைதிலி