அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் - மரபு கவிதை
தலைப்பு :- அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது
பாடல் ---- மரபு
பா வகை - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
முகவரி :- திருச்சி , தமிழ்நாடு , இந்தியா .
அருமையற்ற வீட்டினிலே எந்நாளும்
------ அசுத்தங்கள் மிகுந்திடுமே அவலங்கள்
பெருமையற்றச் சமுதாயம் பேணுகின்றான்
------ பெருந்துன்பம் ஈங்கின்றே நிலைதானே .
கருமையாகப் போனதுவே திக்கெல்லாம்
------ காசினியும் நலன்கெட்டு அழிந்ததாலே
எருமையுமே குடியிருக்கும் நிலைகூட
------ எப்போதும் காணவில்லை சோகந்தான் !!
பாரினிலே இந்திலையே இருந்தாலே
------- பன்னாளும் சுற்றமுமே மாசுதானே
ஏரினையும் பூட்டுகின்ற நிலைமாறி
------- எத்திக்கும் இயந்திரங்கள் கண்டோம்நாம்
சீரிளமைப் பெற்றிடவும் முடியவில்லை
------- சிறந்ததொரு புத்துலகம் ஈங்கில்லை
ஊரினிலும் உலகினிலும் மாற்றமில்லை
------- உண்டான கழிவுகளால் தொல்லைதானே !!
பருவமழை பொய்த்ததனால் விளைநிலமும்
------- பண்புடனே கதிராக முளைத்தலுமே
உருக்கொள்ளும் செந்நெலும் உருவத்தால்
------- உருக்குலைந்தே அழிந்துவிடும் பாவமன்றோ
அருமையான வீடுகளும் வருதலுண்டு.
------- ஆக்கமான வேளாண்மை நீங்கிடவும்
எருமையுமே வீட்டினிலே குடிபுகாத
------- எத்தர்களின் வாழ்வுமுறை வந்துசேரும் .!!
அருமையான வீட்டினிலே அகமலரும்
------- அன்புள்ள இல்லறமே நல்லறமாம்
தருகின்ற கொடைகுணத்தை மாற்றாதீர்
------- தாராள எண்ணமுடன் வாழ்ந்திடுவீர்
வருகின்ற செல்வத்தை மறைக்காது
------- வறியார்க்கே ஈந்திடுங்கள் பண்புடனே
கருவான கருணையுள்ளம் நிலைபெறவே
------- கண்ணியத்தின் திறவுகோலாய் மாறிடுங்கள் !!!
காடுமில்லை மரமுமில்லை கழனியில்லை
------- காற்றுமில்லை மழையுமில்லை வாழ்வுமில்லை
வீடுதோறும் பூசல்கள் விண்ணோக்க
------- விரைந்திடுவர் சண்டையிடத் தெருவினிலே
மாடுமில்லை பாலுமில்லை மக்களுக்கு
------- மண்ணுலகில் வறட்சியினால் தற்கொலைகள்
ஏடுகளில் இயம்பிடலாம் இத்தனையும்
------- எடுத்துரைக்க எவருமில்லை இவ்வுலகில் !!!
அடுக்கடுக்காய் வீடுகளே எத்திக்கும்
------- அண்ணார்ந்து பார்த்தாலோ பாதாளம்
மடுவதனில் தள்ளாதீர் மானிடரே
------- மறுபிறப்பும் இனியில்லை யாவர்க்கும்
எடுக்கின்ற முடிவுகளை இன்றினியே
------- எண்டிசையும் அருமையுற எடுத்திடுங்கள்
படுக்காதே எருமைகளும் வீட்டினுள்ளே
------- பரவசமும் உண்டாகும் நம்பிடுவீர் !!!!