நலந்தானா
===========
நாட்டு நடப்பு நலந்தானா
=நம்மவர் வாழ்வு நலந்தானா
காட்டு மரங்கள் நலந்தானா
=கழனியும் உழவும் நலந்தானா
வீட்டு முற்றம் நலந்தானா
=வேதாள முருங்கை நலந்தானா
பாட்டு வாத்தி நலந்தானா
=பருவக் குயிலும் நலம்தானா
சாதி சனங்கள் நலந்தானா
=சண்டியர் குடும்பம் நலந்தானா
வீதி விளக்குகள் நலந்தானா
=வீணை நரம்புகள் நலந்தானா
நீதி நேர்மை நலந்தானா
=நியாயத் தராசு நலந்தானா
பீதி பிசாசுகள் நலந்தானா
=பிச்சைக் காரர்கள் நலந்தானா
பாதி வயிறுகள் நலந்தானா
=பரம்பரை ஏழ்மை நலந்தானா
நாதி யற்றவர் நலந்தானா
=நதிக்கரை ஓரமும் நலந்தானா
போதி மரங்கள் நலந்தானா
=புத்த பெருமான் நலந்தானா
சேதி ஒன்றுதான் சொல்வீரே
=சீமையில் இருந்து கேட்கின்றேன்
*மெய்யன் நடராஜ்