டப்பா வாலாக்கள்
விலாசத்தை மட்டுமல்ல
வாழ்வையும் தொலைத்திடாமல்
ஒரு முகவரியை தனக்கென
உருவாக்கிக் கொண்ட—மும்பை
நகரத்து டப்பா வாலாக்கள்
கையில் சுற்றும் பம்பரத்தில்
கனவுலகில் வலம் வரும்
சிறுவனைப்போல்
தலையிலேற்றும் சமையல் சுமையால்
ஊரே இவர்களை சுற்றும்
மேய்ந்து, பசியாறி
மறக்காமல் கறவையினம்
வீடு வந்தடைவதுபோல்—டப்பாக்கள்
சுற்றித்திரிந்து, பசி போக்கி
சரியாக வீடு வந்து சேரும்
கையாளும் திறனுக்குக்
கம்ப்யூட்டர் நெட்வொர்க்கேக்
கைகட்டி பின் நிற்கும்
இந்த மும்பை நகரத்தின்
ஏழைத் தொழிலாளிகளிடம்
இரயில் வரும் நேரம்
சரியில்லாத போதும்
முன்னேறி செல்லும் சாரதிகள்,
குறித்த நேரத்தில் பசிபோக்கும்
பெரு நகரத்து பாமரர்கள்
பருவ மாற்றங்களிலும்
பணிகள் சிறப்புற்றிருக்கும்,
இவர்களின் சாதனைகள்
இரயில்வே மந்திரி லல்லுவின்
நிர்வாகத் திறனையே மிஞ்சும்
இங்கிலாந்து நாட்டின்
இளவரசப் பெருமகனும்
வியந்து பாராட்டிய
இந்திய தேசத்தின்
இமாலய சாதனையாளர்கள்