ஒரு விகற்பக் குறள் வெண்பாக்கள் ---செந்தமிழ்ச்சாரல்
ஈரடி வெண்பாவை இன்றே எழுதுங்கள்
சீரடி நன்றாம் சிறப்பு .
திருத்தமும் சொல்லிடத் தீர்க்கும் பிழைகள்
எருவாகும் வெண்பாவின் ஏர் .
இலக்கணம் கற்றால் இனிமையும் உண்டாம்
கலக்கமும் வேண்டாம் கவி .
சாரல் முயற்சிகள் சாற்றுமாம் செந்தமிழைப்
பாரதியும் ஈங்கின்றே பார் .
வெண்பாவும் கற்றிட வேண்டாம் தயக்கமும்
நண்பா எழுதுவாய் நன்று .
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்