தமிழ்த் தாயின் புலம்பல்
ஒரே பயமாக இருக்கிறது !
நாளுக்கு நாள் அது அதிகரித்துக் கொண்டிருக்கிறது !
என்ன ஆகுமோ தெரியவில்லை !
மயக்கமாக வருகிறது !
மனமெல்லாம் ஒரு சஞ்சலம் !
நினைக்கவே இல்லை !
என் சொந்த பிள்ளைகள் தான் !
இப்படி செய்வார்களா ?
என்னிடம் பால் குடித்தவர்கள் தான் ,
என்னால் வளர்ந்தவர்கள் தான் ,
என்னை அழிக்க நினைப்பார்களா ?
சே !இருக்காது !
'வெறும் மனப் பிரமையாகத்தான் இருக்கும் '..
என்று கூட நினைத்தேன் !
ஆனால் ,
உற்று பார்த்தால் ....
உண்மை தான் !
அவர்கள் கைகளில் பளபளக்கும் கத்திகள் ...
எல்லாம் என்னை தாக்க !
பெற்ற தாயை தாக்க !
உண்மைதான் !
முதலில் 'நான் யார் ?'என்று
நீங்கள் கேட்பது புரிகிறது !
என்னைத் தெரியவில்லை ?
நான்,உங்கள் தாய் !
தமிழ்த் தாய் !
புலம்புவது நான் தான் !
உங்கள் தாய் தான் !
அவர்கள் கைகளில் இருக்கும் கத்திகள் ?
'ஆங்கிலம்' என்ற கூர்மையான கத்திகள் !
சொல்லுக்கு சொல்
அதைக் கொண்டு
என்னைக் குத்துகிறார்கள் !
குத்தி ,குத்தி அதை 'என்ஜாய் ' பண்ணுகிறார்கள் !
இருக்கட்டும்,இது அவர்கள் காலம் !
அந்தக் காலத்தில்
திரவியம் தேட வெளி நாடு
சென்ற என் பிள்ளைகள்
தமிழை ,
தேடி சென்ற நாடுகளில் விட்டார்கள் !
நட்டார்கள் !
அவர்கள் மொழியை என்னில் நட வில்லை !
ஆனால் இன்று என் பிள்ளைகள் ,
அலுவல் ஆங்கிலத்தை
அங்கே விடாமல்
அழைத்து வந்து ,
தத்து எடுத்து
எனக்குள் நுழைத்து ,
என்னை பித்தாக்குகிரார்கள் !
அசுத்தப் படுத்துகிறார்கள் !
என் பிள்ளைகளே !
ஆங்கிலத்தில் தமிழை கலந்து
அயல் நாட்டில் போய் பேசி பாருங்கள் !
அடியும் உதையும் தான்
அளவின்றி கிடைக்கும் !
தமிழில் ஆங்கிலத்தை கலந்து தமிழ் நாட்டில் பேசி பாருங்கள் !
பரிசும்,பாராட்டும் பலரால் கிடைக்கும் !
சே !என்ன கேவலம் !
அதுவும் நான் பிறந்த
என் தமிழ் நாட்டில் !
எனக்கென்று பரிந்து பேச யாருமே இல்லையா ?
எங்கே என் தமிழ் பால் குடித்த பிள்ளைகள் ?
கவி பேரரசும்,கவிக்கோவும் எங்கே !
கண் காணும் தூரத்தில்
கலைஞர் கூட காண வில்லையே !
எதற்கெல்லாமோ குரல் எழுப்பும் சீமான் எங்கே ?
வைகோ ,தொல் எல்லாம் எங்கே ?
என்னை வைத்து
இனி வாக்கு வாங்க
முடியாதென்று நினைத்தார்களோ ?
தெரியவில்லை !
தொலைக் காட்சியும் உடகங்களும்
ஆங்கிலதிற்கு அடிமை
முகவர்களாக ஆகி
என்னை முற்றிலும் விலக்குவது ,
உங்களுக்கு தெரிகிறதோ ,இல்லையோ
எனக்கு தெளிவாக தெரிகிறது !
ஒரு குவளைப் பாலிற்கு ஒரு துளி விடம் போதும் !
முற்றிலும் அழித்து அதை முழுதாய் ஒழிக்க !
நீங்களோ துளி துளியாய்
ஆங்கில விடத்தை
என் தொண்டைக் குழிக்குள் தொடர்ந்து இடுகிறீர்கள் !
'முயன்று ' என்று தமிழில் சொன்னால் புரியாதா ?
ஏன் 'ட்ரை ' என்கிறீர்கள் ?
அப்படி சொல்லி 'முயன்று' பார்த்தீர்களா ?
அலை பேசி எண் கேட்டால்
ஒன்பது,ஆறு ,மூணு ,ஐந்து ,ஏழு ...என்று சொன்னால் புரியாதா ?
ஏன் 'நயன் ,சிக்ஸ்,த்ரீ , ......சே !
எதற்காக என்னை
திட்டம் போட்டு அழிக்கிறீர்கள் ?
பணத்திர்க்காகவா ?
பவிசிர்க்காகவா ?
எதற்காக எனக்கு கல்லறை கட்டுகிறீர்கள் ?
எனக்கு இன்று தெரிந்தாக வேண்டும் !
கல்லறை கட்டும் பணியில்
'கர சேவை 'செய்பவர் யார்,யார் ?
இதோ அவர்கள் பட்டியல் !
அனைத்து தொலைக் காட்சிகளும் .பதிப்புகளும் !
திரைத் துறையும் ,அதன் கலைஞர்களும் !
தின செய்தி தாள்களும் ,கல்விக்கூடங்களும் !
ஊடகங்களும் ,தொழில் நுட்பமும் !
ஆசிரியர்களும் ,மாணவர்களும் !
அரசாங்கமும் ,எதிர்க் கட்சியும் !
பணக்காரனும் ,பாமரனும் !
நீங்களும் ,உங்கள் பிள்ளைகளும் !
மொத்தமாய் சேர்ந்து ,ஒற்றுமையாய்
எனக்கு குழி தோண்டுகிறீர்கள் !
தமிழர்கள் மற்ற எல்லாவற்றிலும்
பிரிந்து இருந்தாலும்,
எனக்கு குழி தோண்டுவதில் என்ன ஒரு ஒற்றுமை !
சென்னைப் பிரளயத்தில்
இமயமாய் உயர்ந்து நின்று
எல்லோரையும் காப்பாற்றிய இளைஞர்களே !
இந்தி மிரட்டிய போது
எனக்காக போராடிய இதயங்களே !
எங்கு சென்றீர்கள் என் இன்னலான இந்த நேரத்தில் ?
பொங்கி எழுங்கள் !
ஆங்கிலத்தை அலுவலில் மட்டும் அழுங்கள் !
இல்லத்திலே ,
உங்கள் உள்ளத்திலே ,
நான் மட்டும் ,
உன் தாய் மட்டும் ,
தமிழ் தாய் மட்டும்,
தங்கட்டும் !
நாவில் தமிழ் மட்டும்
நடமாடட்டும் !
எனக்காகக தோண்டி கொண்டிருக்கும் ,
குழியில்
ஆங்கில மோகத்தைப் போட்டு ,
முழுதுமாய்
குழியை மூடுங்கள் !
'கல் தோன்றாக்
காலத்தில் தோன்றிய
என்னை
இன்னும் மேன்மை படுத்துங்கள் !
நான் தாய் என்றாலும் ,
கன்னித் தமிழ் தான் !
ஆங்கிலத்தை அறவே விலக்குங்கள் !
என் வலியெல்லாம் மாறும் !
வளமாய் வாழ்வேன் !
இன்னும் பல ஆயிரமாண்டு !
நானும் வாழ்வேன் !
நீங்களும் வாழ்வீர்கள் !