கல்வி என்பது

“ கல்வி என்பது”


மாணவர்களுக்கு முதலில் அவர்கள் மாணவர்கள் என்பதை வலியுறுத்தி அவர்கள் மனதில் ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே நம் முன்னோர்கள் கல்வி கற்க ஒரு மாணவன் எப்படி குருவை மதித்து ஒழுக்கமாக அடங்கி நடந்து கல்வியைக் கற்கவேண்டும் என்று முறையாக ஏற்படுத்தி வைத்திருந்ததை தெளிவாக எடுத்துச் சொல்லி ஒரு கட்டுப்பாடான கல்வி முறையை, ஒழுக்கத்தை போதிக்க வேண்டும்.
மாணவப் பருவம் என்பது குதூகலமான கள்ளமில்லாத குழந்தையைப் போன்றது அதிலே கவலைகளுக்கோ மன சஞலத்துக்கோ இடமில்லை நல்ல உணவு நல்ல விளையாட்டு நல்ல உடற்பயிற்சி நல்ல கலைகளை வளர்த்துக் கொள்ளும் திறமை . என்று நல்லவைகளையே போதித்து அவைகளைப் பின்பற்றவைக்க வேண்டும் .
ஒரு குறிப்பிட்ட வயது வரை அரசியல், சினிமா போன்ற மாயவலைகளை அவர்கள் ஒதுக்கி சுய கட்டுப்பாட்டுடன் மனதை ஒருமைப் படுத்தி ஆரோக்கியமான குளியல் சுத்தமாக உடலைப் பேணுதல் பெரியவர்களிடம் மரியாதையாக நடத்தல் நம் பாரம்பரியத்தின் மூத்த இதிகாசங்கள் புராணங்கள் வேதங்கள் ஆகியவற்றில் இருக்கும் உன்னதமான அறிவுரைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி தற்போதைய விஞ்ஞானமே அந்தக் காலத்து மெய்ஞ்ஞானம் என்பதை விளக்கமாக அவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துச்சொல்லி பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் நற்குணங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் நியம நிஷ்டைகள் ஆகியவற்றை போதிக்கும் வகையில் அவர்களின் பாடத் திட்டங்களை மாற்றவேண்டும் .
நம் பெற்றோர்கள் நம் தாய் நாடு நம் கலாசாரம் நம் தேசத்தின் பெருமை பற்றிய விளக்கங்களை எடுத்துச் சொல்லி நம் தேசத்துக்காக பாடு பட்ட பெரியோர்களைப் பற்றி எடுத்துச் சொல்லி நம் சுதந்திரத்தின் அருமை பெருமைகளைப் பற்றியும் வருங்காலத்தில் நம் நாடு எப்படி முன்னேற வேண்டும் என்பதைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து நாகரீகமான நாணயமான நேர்மையான தலைமுறைகளை உருவாக்கும் வண்ணம் நம் கல்வி இருக்க வேண்டும்.அப்ப்டிப்பட்ட கல்வித் தரத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஒரு இனிய ,வாழ்க்கைக்குத் தேவையான பல அறிவார்ந்த, செய்திகளை அறிந்து கொள்ள,நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ள என்னும் உண்மையை அவர்களுக்கு மனதில் ஏற்படுத்தவேண்டும் என் சிறு வயதில் ஒரு பாடல் கேட்டிருக்கிறேன்.

“ தலைவாரிப் பூச்சூட்டி உன்னை
பாட சாலைக்கு போவென்று
சொன்னாள் உன் அன்னை
சிலை போல ஏன் அங்கு நின்றாய்
சிலை போல என் அங்கு நின்றாய்
நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
மலைவாழை அல்லவோ கல்வி
மலைவாழை அல்லவோ கல்வி
உன் வாயாற வாழ்த்துவாய்
போ என் புதல்வீ
என்கிற இந்தப் பாரதிதாசன் அவர்களின் பாடலில் எவ்வளவு அழகாக அத்துணை நாட்கள் பெற்றோர் அருகிலேயே இருந்து விட்டு முன் பின் தெரியாத புதுச் சூழலில் பெற்றவர்களை விட்டு தனியே பள்ளிக்கூடத்துக்கு செல்லும் குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதையும் விளக்குகிறார்
கலங்கும் பிள்ளைகளுக்கு அதன் அவசியத்தையும் கல்வி என்பது மலை வாழைப் பழம்போல் அவ்வளவு இனிமையானது அது உள்ளத்துக்கும் உடலுக்கும் நன்மை செய்யும். சுவைக்க இனிமையாய் இருக்கும் என்று மிக எளிதாக கல்வி என்பதை விளக்குகிறது இந்தப் பாடல் . அது போல முதலில் பிள்ளைகளுக்கு கல்வி என்பது இனிமையானது நம் அறிவை வளர்த்துக்கொள்ளத் தேவையானது என்று இதமாக பதமாக உணர்த்தவேண்டும்
இந்த அடிப்படை உணர்த்துதலை செய்யாவிடில் பிள்ளைகளுக்கு வெறும் காகிதச் சுமையாகத்தான் கல்வி மனதில் பதியும் . அடிப்படை கல்வியே மனதில் குழந்தைகளுக்கு கல்வி என்பது மிகவும்ம் கடினமான செயல் என்னு எண்ணத்தை விதைப்பதே கல்வி என்பது வெகு சுலபமானது இனிமையானது என்று உணர வைத்தலே அவர்களை நல்ல மாணவர்களாக உருவாக்கும் முறை.
கற்றலின் கேட்டல் நன்று என்று ஒரு சொல் வழக்கு இருக்கிறது. அதன் பொருளை ஆராய்ந்தால்
“ செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை” என்று வள்ளூவர் தலை சிறந்த செல்வமாக போற்றிய செல்வம் செவிச்செல்வம் ஏனென்றால் முதன் முதலில் மந்திர உபதேசங்கள், குருவின் மூலமாக தெளிவான குரலில் ,தெளிந்த நடையில் இலகுவான முறையில் படிப்படியாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. அதுதான் முதற் கல்வி முறை.
அப்படி கற்பிக்கும் முறையில் ப்ரதானமாக மாணவர்கள் ஆசிரியர் ,அல்லது குரு சொல்லும் சொற்களின் ஒலியை மிகக் கவனமாக காதால் கேட்க வேண்டும் ஒலி என்பது மிகவும் ப்ரதானமான சாதனம். நம்முடைய ஒலி வாங்கியாகிய காது என்னும் உறுப்பு வாங்கும் ஒலியை மூளைக்கு அனுப்பி அந்த ஒலியின் பொருளை நமக்கு உணர்த்துகிறது. ஆகவே காதுகள் வாங்கும் ஒலி நேரிடையாக மூளைக்கு அனுப்பப்படுவதால் தாமாகவே ஒரு ஐம்பது சதவிகிதம் பதிந்து விடுகிறது.
மற்ற ஐம்பது சதவிகிதப் புரிதல் என்பது கவனம் சிதறாமல் ஒரு தியானம் போன்று குரு சொல்லுவதை மனதை சிதறவிடாமல் உன்னிப்பாக கவனித்து, மனதை அதில் செலுத்தி இன்னமும் சற்று ஆராய்ச்சி மனப்பன்மையுடன் மூளைக்கு வேலை கொடுத்து சுய சிந்தனைக்கு வேலை கொடுத்து மீண்டும் மீண்டும் குரு சொல்லியதை நினைவில் நிறுத்தி தொடர் சிந்தனைகளாக அதையே நினைத்து நினத்து அசைப்போடுதலின் மூலமாக இன்னும் சற்று விவரமாக ,ஆழ்மாக பொருள் புரியும்.
இங்கே நான் கூறியது மன ,அல்லது மூளையின் அசைபோடுதல் ஆனால் பொதுவாக அசைபோடும் மாடுகளைக் கவனித்தால் புரியும் அவைகள் அசைபோடும் போது கன்னத்தின் தசைகள் ஆடுதலின் காரணமாக காதுகளின் உள் உறுப்புகளும் அசியும் நிலை ஏற்படுகிறது அதனால் மாடுகள் உணவை அசை போடும் போதே எண்ணங்களையும் அசைபோடுகின்றன என்றே தோன்றுகிறது . அதனால்தான் மனிதருக்கும் எண்ணங்களை அசைபோடுதல் என்னும் சொல் வழக்கு உபயோகத்துக்கு வந்திருக்கிறது.
அல்லது சில நேரங்களில் ப்ரமை பிடித்தாற்போல் இருக்கும் மனக் குழப்பத்தை அடைந்த சிலரை தெளிய வைக்க லேசாக முதுகில் தட்டுதலோ,அல்லது பலமாக கன்னத்தில் தட்டுதலையோ செய்கிறார்கள். இது அவர்களை அறைய வேண்டும் என்னும் எண்ணத்தில் அறையும் அறையல்ல அவர்களைத் தெளிய வைக்கும் முயற்சி.
ஏனென்றால் அப்படி தட்டுதலின் மூலமாக ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி அந்த அதிர்வுகள் மூளைக்கு சென்று செயலற்றிருந்த மூளயின் செயல் பாட்டுக்கு காரணமாக ஆகும் என்பது மருத்துவர்களின் கண்டு பிடிப்பு,அப்படி கன்னத்தில் தட்டும்போதுபோது காதின் செவிப்பறைகளில் ஏற்படும் ஒலி அதிர்வுகள் மூளையில் பதிவாகின்றன.
ஆக மொத்தம் கற்றலின் கேட்டல் நன்று அல்லவா காட்டு மிருகங்கள் கூட வாசனையை நுகர்வதாலோ, அல்லது மற்ற மிருகங்கள் வரும் ஒலி அதிர்வுகளை காதால் கேட்கும் திறன் பெற்றிருப்பதால்தான் தங்களைக் காத்துக்கொள்ள முடிகிறது ஒரு முறை சிங்கத்தின் கர்ஜனை,அல்லது அதன் நடையால் ,ஓட்டத்தால் ஏற்படும் அதிர்வுகளின் ஒலியை காதில் வாங்கிவிட்ட மிருகங்கள் அடுத்த முறை மிக எளிதாக சிங்கத்தின் வருகையை அறிந்துவிடும் திறன் பெறுகின்றன. ஏனென்றால் காதால் கேட்ட ஒலிகள் மூளையில் மிக எளிதாகப் பதிகின்றன.
பேசும் கிளி என்று சொல்கிறோம் நாம் பேசுவதை அடிக்கடி காதால் கேட்கும் கிளிகள் அவைகளை அறியாமலே நாம் சொல்வதை திருப்பிச் சொல்லும் வல்லமை பெறுகின்றன . அதே போலத்தான் குழந்தையாகப் பிறந்த நமக்கு நம்முடைய தாயார் பேசும் மொழி காதால்,கேட்பதன் மூலமாகவே மனதில் பதிந்து நம் தாய்மொழியையே கற்கும் அளவுக்கு மூளைத்திறன் பழக்கப்படுகிறது. பொதுவாக ஊமைகளின் குழந்தைகளும் ஊமைகளாக இருப்பதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம்,
ஏனென்றால் அங்கு ஒலிகள் எழுப்ப யாருமில்லாததுதான் முதற் காரணம் . அப்படிப் பிறந்த குழந்தைகளை ஒலிகள் கேட்குமிடத்தே வளரவிட்டு அவைகளுக்கு பேசும் சக்தியை மீட்டுத் தந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆகவே காதுகள் மிக முக்கியமான கருவி கல்வி கற்க, குழந்தை முதன் முதலில் கருவாகி இரண்டு சென் டி மீட்டர் அளவில் இருக்கும் போதே அதன் இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது . அந்த இதயத்துடிப்பின் லப்டப் ஓசைதான் முதன் முதலாக ஒவ்வொரு ஜனனமும் கேட்கும் முதல் ஒலி.
அப்போதே கேட்க ஆரம்பித்துவிடுகிறது . முதன் முதலாக ஒரு குழந்தையின் இயக்கம் என்று பார்த்தால் காதால் கேட்பதுதான். அதன் பிறகுதான் மற்ற இயக்கங்கள் தொடர்கின்றன. அதனால்தான் கற்றலின் கேட்டல் நன்று ஒலிதான் முதலில் மனிதனின் மொழிக்கே வழி வகுத்தது' தாயின் கர்பத்திலிருக்கும்போதே தாயின் தாலாட்டையும் , கேட்கும் திறன் கொண்டது குழந்தை, மஹாபாரதத்தில் அர்ஜுனன் மகன் அபிமன்யூ தாயின் கர்பத்திலிருக்கும் போதே கிருஷ்ணனால் விளக்கப்பட்ட சக்கரவியூகத்தின் நுணுக்கத்தை கேட்டு அறிந்தான் என்கின்றனர்.
முதன் முதலில் ஒலியின் மூலமாகத்தான் மனிதனும் ,மிருகங்களும் தங்களின் இயல்பையும், உணவுதேடும் முறையையும் கற்றன .ஒலி என்பதே வாழ்க்கைக்கு தேவையான ஜீவாதாரம் . ஒலியும் ஒளியும் என்கிறார்களே .அதில் கூட ஒலிக்குதான் முதன் முதல் மரியாதை வானொலி வந்து பல காலம் ஆகிய பின்னர்தான் தொலைக்காட்சி வந்திருக்கிறது ஒலியின் ஸ்ருதி பேதம் தான் எண்ணங்களை வெளிப்படுத்தும் முறையாக அமைந்தது.
கத்திப் பேசும் பலருக்கு நடுவே அமைதியாகப் பேசும் நபரை நம் கவனிக்கிறோம் . அமைதியாக சொல்லும் போது கவனிக்கப் படாத போதுதான் உரக்க கத்திப் பேசி கவனத்தை ஈர்க்க முயல்கிறோம். ஆகவே நம் கவனம் என்பது எதால் ஈர்க்கப்படுகிறதோ அங்கே நம் மூளை உற்றுக் கவனிக்க ஆரம்பிக்கிறது. மூளை கவனிக்க ஆரம்பித்தால்தான் ஒருமுகப்படுதல் சாத்தியமாகிறது. ஒருமுகப்படுதல் சாத்தியப்படும்போதுதான் உள்வாங்க முடிகிறது.
உள்வாங்கினால்தான் புரிகிறது, புரிந்தால்தான் லயிப்பு வருகிறது லயிப்பு வந்தால் இன்னும் அதிகமாகப் புரிகிறது. அதிகமாப் புரிந்து கொண்டால்தான் கல்வி மேம்படுகிறது. கல்வி என்பது வாங்கிக் கொண்டதை புரிந்து கொள்ளாமலே அப்படியே வாந்தி எடுத்து அதிக மதிப்பெண் பெறுவதல்ல, புரிந்து கொண்டு நம்முடைய எண்ணங்களையும் சேர்த்து ,நம் ஆராய்ச்சியின் விளைவுகளையும் சேர்த்து அளிக்கும்போதுதான் மதிப்பெண் அதிகம் பெற்ற மாணாக்கரைக் காட்டிலும் அதிகமாக வாழ்க்கையில் முன்னுக்கு வர முடிகிறது.
பல முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதன் பிறகு முன்னேறாமல் போவதும் இந்தப் புரிதல் விகிதாசார அடிப்படையிலேதான் விளைகிறது. இந்த தேர்வின் முடிவுகள் வெளியான தருணத்திலே ஏற்கெனவே முதல்; மதிப்பெண் பெற்ற மாணவர்களை பத்திரிகைகள் பாராட்டிய மாணவர்களின் தற்போதைய நிலையை ஆராய்ந்து எழுதும் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில் மிகக் குறைந்த சதவிகிதத்தினரே மேலும் முன்னேறி யிருக்கிறார்கள் என்னும் விளைவுகளை. ஆகவே கல்வி என்றாலே புரிந்து கொள்ளல் என்பது மறுக்க முடியாத உண்மை .
அந்தப் புரிந்து கொள்ளல் என்னும் தன்மையை ஆராய்ந்து அடிப்படைக் கல்வியை வடிவமைத்தாலே கல்வி முறையை மாற்றினாலே கல்வியும் மேம்படும் ,மாணவர்களும் மேம்படுவர். கல்வியின் தரம் குறைவதற்கு மிக முக்கியமான காரணம் பாடத் திட்டங்கள் சரியாக வடிவமைக்கப் படாமை , தற்போது கல்வி பாட அமைப்பில் படிக்கும் பல செய்திகள் வாழ்க்கைக்கு என்றுமே தேவையில்லாதவை.
மற்றும் இனி வருங்காலத்தில் நாம் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்கிற பண்பாடு சம்பந்தமான செய்திகள், மற்ற நாடுகளின் வளர்ச்சி பற்றிய விவரங்கள்" நம் நாடு காண வேண்டிய வளர்ச்சி பற்றிய செய்திகள். விஞ்ஞான முன்னேற்றங்கள் நம்முடைய பழைய மரபுகள் சமபந்தமான செய்திகள். மரபுகளைக் காக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் செய்திகள்.போன்ற பல செய்திகளை அளிக்கலாம். அவற்றையெல்லாம் விடுத்து,
ஆபாசமான திரைப்படங்கள், வன்முறை கூடிய திரைப்படங்கள் மந்திரம் மாயம் செய்யும் தொலைக் காட்சித் தொடர்கள் ஆகியவைகளை குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அளித்தால் எப்படி ஒரு நல்ல தலைமுறை உருவாகும்? ஆகவே மாணவர்களுக்கு நல்ல கல்வி அளிக்க வேண்டுமென்றால் முதலில் பெற்றோர்கள் நல்ல செய்திகளை நல்ல ஞானத்தை ஊட்டும் நிகழ்ச்சிகளை அவர்களும் கண்டு குழந்தைகளையும் காணவைக்கவேண்டும். ஒழுக்கம் போதிக்க வேண்டுமானால் போதிப்பவர் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் . ஆகவே நாமும் நல்ல விதத்தில் நம்மை மாற்றிக் கொண்டு நம் வருங்கால சந்ததிகளையும் நல்ல விதமாக வளர்த்தால் நம் நாடும் நம் கலாசாரமும் நம் பெருமையும் உயரும் என்பதில் ஐயமில்லை


அன்புடன்
தமிழ்த்தேனீ

எழுதியவர் : தமிழ்த்தேனீ (24-Mar-17, 1:44 pm)
சேர்த்தது : thamizthenee
Tanglish : kalvi enbathu
பார்வை : 1421

மேலே