இலையுதிர் காலம் - பகுதி 2
வேன் வந்து நின்றதும் அதிலிருந்து சற்று பெருத்த உடலும், வெள்ளை நிறமும் , மெதுவான நடையும் உடைய முப்பத்தைந்து வயதான பெண்மணியும் உடன் சற்று தலை நரைத்து குள்ளமாய் கறுத்த தோல் கொண்ட நாற்பது வயது ஆணும் இறங்கினார்கள். வாகனத்திலிருந்து இறங்கி வந்த ஓட்டுனரும் இரண்டு பணியாட்களும் விரைவாய் வாகனத்திலிருந்த அனைத்து பொருட்களையும் இறக்கி வைத்தனர். தலைமுதல் கால்வரை ஒரே அளவில் இருந்த மரத்தில் செய்த நிலைப்பேழையை மூவரும் கடினப்பட்டு இறக்கிக் கொண்டிருந்தனர். இதையெல்லாம் தெருவில் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் அவர்களிடம் சென்று நீங்க எந்த ஊர்? எந்த இடம்? என்ன வேலை? என பல கேள்விகளை கேட்க அவர்களும் ஏ... பாத்து பாத்து பாத்துப்பா, ஜாக்கிரதையா இறக்கு, என்னப்பா நீ பொறுப்பே இல்லாம வேலை செய்யுற எனும் வார்த்தைகளுக்கு நடுவில் எல்லாம் பதில்களை தந்து கொண்டிருந்தனர்.
அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சிவாவிற்கு மனதினுள் மிகப்பெரிய மகிழ்ச்சி வந்திருந்தது அதற்கு காரணமும் இருக்கிறது , அந்த வீடு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பூட்டி இருந்த வீடு. அந்த வீட்டின் பின்புறம் ஒரு புதர் நிறைந்த பகுதி உண்டு அங்கு செல்ல வேண்டும் என்றால் அந்த வீட்டின் வாசல் வழி சென்று மாடியேறி பிறகு பின்புறமுள்ள படி இறங்கித்தான் அங்கு செல்ல வேண்டும். அந்த வீட்டின் முன்னால் அதாவது சிவா வீட்டின் இடது பக்கத்தில் உள்ள காலி இடம், அது வேறு ஒருவர் வீடு கட்ட வைத்திருந்த இடம் பொருளாதார பற்றாக்குறையால் வீடு கட்டுவதை நிறுத்தி வைத்திருந்தார். அந்த இடத்தில் தான் எப்போதும் சிவா தனது நண்பர்களுடன் மட்டைப்பந்து விளையாடுவான். அப்படி விளையாடும் போது அவன் அடிக்கும் பந்துகள் பல அந்த புதர் நிறைந்த பகுதிகளில் சென்று விழுந்து தொலைந்திருக்கின்றன. பலநாள் இரவு தூக்கங்களை இவனும் தொலைத்திருக்கிறான் அந்த பந்துகளின் நினைவில். சாதாரண பந்து தான் ஆனால் சிவாவிற்கு அவைதான் உலகமாக இருந்தது, சில கேட்சுகள் நழுவி விட்டால் இவனுக்கு குறைந்தபட்சம் இரு நாட்கள் அந்த நினைப்பு போகாது அந்த அளவு சிவா மட்டையையும் பந்துகளையும் நேசித்தான்.
இப்போது காணாமல் போன அனைத்து வசந்தங்களையும் ஒட்டு மொத்தமாக திரும்ப பெற்ற குதூகலம் அவனை தலைகால் புரியாது போக வைத்தது. அப்பாடி இனி அந்த பந்துகளை எல்லாம் எடுத்துடலாம் என மகிழ்ந்து கொண்டே நேரத்தை பார்த்தான் மணி எட்டு முப்பது அப்போதுதான் அவனுக்கு நினைவே வந்தது வேகவேகமாக பள்ளிக்கு செல்ல நடக்க தொடங்கினான்.
செங்கம், மலைகள் சூழ்ந்த பகுதி. இயற்கையின் அழகை முழுவதும் கொண்டுவந்து ஓரிடத்தில் குவித்து வைத்ததுபோல் இருக்கும் பசுமை நிறைந்த மலைகள் அவை. பலவித மலர்களும், மூலிகைகளும், உயர்ந்த மரங்களும் அதில் ஆக்காங்கே தேன்கூடுகளும், சிறகடிக்கும் பலவித பறவைகளும் இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாய் ஒரு அழகுமிகுந்த நதியும் கொண்டு கண்களை கவரும் பகுதியாகும். இந்த பகுதி பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்ட இடமாகும். நன்னன் என்ற மன்னனால் ஆளப்பட்டு வந்ததாக வரலாறுகள் சான்று தருகின்றன. நல்ல நீர்வளமும், ரசனைமிகுந்த சிற்பங்கள் நிறைந்த கோவில்களும் செங்கம் சிறப்புக்களுள் முக்கியமானவை.
இந்த பகுதியில் ஓடும் ஆறு சேயாறு என்று அழைக்கப்படும்.
செங்கம் நகரத்தை சங்ககால தமிழ் இலக்கியமான பத்துபாட்டு தொகைநூலில் 10ஆவதான மலைபடுகடாம் என்று கூத்தர் கூறியுள்ளார். ஆற்றுபடை என்ற நூல் செங்கம் நகரை பற்றியும் செங்கம் நகரை ஆண்ட நன்னன் சேய் நன்னன் என்ற மன்னனை பற்றியும் செங்கம்நகர் அருகில் உள்ள ஜவ்வாது மலையில் உற்பத்தியாகி வருகின்ற சேயாறு என்ற செய்யாற்னை பற்றியும் செங்கம் அருகாமையில் உள்ள பர்வதமலை குறித்தும் பாடப்பட்டதாகும்.இத்தனை சிறப்புகள் கொண்ட ஊரில் தான் சிவாவும் இருக்கிறான். அவனது பள்ளி அவன் வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளிதான் இருக்கிறது.
அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி செங்கம், பிச்சை என்பவர் நீண்ட காலமாகவே மாங்காய், நெல்லி, இலந்தைப்பழம் இவற்றையெல்லாம் விற்றுவருகிறார். அந்த பள்ளியில் பிச்சை என்றால் தெரியாதவர்கள் யாரும் இல்லை. பள்ளி நாட்கள் என்றால் இவரது மடி நிறைந்தே இருக்கும். இந்த பள்ளிக்கு இவர்தான் நுழைவாயில் இவரை கடந்துதான் பள்ளிக்குள் நுழையமுடியும். கறுத்த நிறம், அழுக்கேறிய பற்கள் மற்றும் ஆடைகள் என பார்க்க கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் நல்ல நபர் தான்.
இவரை தாண்டியதும் காலம் பொன் போன்றது, கல்வி கண் போன்றது என்று ஒரு வாசகம் வெறும் எழுத்தளவில் மட்டும் பதித்து வைத்திருக்கும் அதன்பின் ஒரு நீண்ட மைதானம். சிவா எப்பொழுதும் மட்டையுடன் இங்குதான் விளையாடிக்கொண்டிருப்பான். இந்த மைதானத்தில் கிடக்கும் சிறு கல் கூட இவனை பதிவு செய்து வைத்திருக்கும்.
சுற்றி இருக்கும் மதில்சுவரில் எல்லாம் ஆங்காங்கே சாயம் பூசி கரும்பலகைகளாக பயன்படுத்தப்படும். காரணம் எத்தனைதான் கட்டிடங்கள் இருந்தாலும் எப்போது விழும் என தெரியாது ஆதலால் மரத்தடியே வகுப்புகளாக இருக்கும். எத்தனையோ கல்வி அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு போனாலும் இந்த நிலை மட்டும் மாறுவதில்லை.
பள்ளியின் ஒரு பகுதியில் உள்ள மதில் சுவரில் பெரிய ஒரு ஓட்டை போட்டிருக்கும். வகுப்பு பிடிக்காத மாணவர்களுக்கும், தாமதமாய் வரும் மாணவர்களுக்கும் அதுதான் போகவும் வரவும் வழி. சிவாவும் அந்த பெரிய ஓட்டைவழியில் பலதடவை ஓடி இருக்கிறான். அவன் அருகிலிருக்கும் எரிக்குதான் அதிகம் செல்வான் அந்த வழியை பயன்படுத்தி.
இப்படித்தான் ஒருநாள் அந்த வழியில் வகுப்பிலிருந்து தப்பி ஓடியபோது அந்த சம்பவம் நடந்தது. அதிலிருந்து அவன் மீண்டு வர பலநாள் ஆனது. மனதை மிகவும் பாதித்த நிகழ்வு அது.
(தொடரும் ....)
- கி. கவியரசன்