அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சோகங்கள் தூசாகும் தருணமிது ---- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் .

சிறப்புக் கம்பர் சான்றிதழ் போட்டியாளர் .


சோகங்கள் தூசாகும் தருணமிது .
------ சொந்தங்கள் சேர்கின்ற நேரமிது .
பாகங்கள் பிரிவினைகள் இல்லையினிப்
------ பந்தங்கள் ஒன்றுகூடும் நாளிதுவாம் .
மேகங்கள் கூடுகின்ற வேளையிலே
------ மேன்மையான வான்மழையும் பெய்திடுமே
வேகங்கள் தடையின்றி இருந்தாலே
------- வேண்டியன கிட்டிடுமே உலகினிலே !!!


கண்ணீரும் வேண்டாமே வாழ்வினிலே
------ கலங்கிடவும் வேண்டாமே இவ்வுலகில் .
மண்ணுலகில் மானிடராய்ப் பிறந்ததினால்
------- மலர்ந்திடுமே நல்வாழ்வும் மாற்றமின்றி .
உண்ணுசுவை மிக்கதுவே இல்லறமும்
------ உறவாகும் உயிர்களுமே உணர்வுடனே !
எண்ணங்கள் நலமாக மாறிவிட்டால்
------- எல்லையிலா இன்பங்கள் வந்துசேரும் !!!


தூசாகும் சோகங்கள் காசினியில்
------- துன்பங்கள் அகன்றிடுமே எந்நாளும் .
ஈசான மூலையிலே அடுக்களையும்
------- ஈடிலா மனையாகும் எம்மருங்கும் .
பாசாங்கு செய்பவர்கள் மாய்ந்திடுவர் .
------ பண்பாளர் மட்டுமன்றோ உடனிருப்பார் .
ஆசாரம் பார்க்கின்ற மக்களினம்
------- அகிலத்தில் மாறிடுவர் உறவுகளால் !!!


தருணங்கள் நல்லறத்தைத் தந்தாலே
------ தரமான இன்பங்கள் உண்டாகும் .
அருமையான இல்லறத்தின் பரிசாகும்
------- அன்புடைய மழலையுமே உயிராகும் .
இருவருக்குள் பந்தத்தை உருவாக்கும்
----- இணையில்லா செல்வமன்றோ பிள்ளைகளும்
திருப்புகழும் பாடிடுவோம் நாள்தோறும்
------ திக்கெட்டும் சோகங்கள் தூசாகும் !!!


மொத்த சொற்கள் :- 96

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Mar-17, 8:32 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 42

மேலே