ஆறாம் விரலே
எனக்கு கையிலும் காலிலும் ஆறாறு விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் இருந்தன. என் சிறுவயதில் அதை அறுவை சிகிச்சையால் அகற்றி விட்டனர். அதே போன்று இன்று மின்சார இரயிலில் ஆறாறு விரல்கள் கொண்ட ஒருவரைக் கண்டேன். கண்டதும் வந்தது இந்தக் கவிதை !
ஆறாம் விரலே அழுகின்றேன் - உன்
. அழகை நினைத்தே அழுகின்றேன் !
வேறாய் உன்னைக் கருதியவன் - உனை
. வேண்டா மென்றே திருகியவன் !
கூறாய் உன்னை வெட்டுகையில் - நான்
. குழந்தை ! எனக்கும் நினைவில்லை !
மாறாய் இப்போ துனையெண்ணி - விழி
. மழையைப் பொழிய நிற்கின்றேன் ! (ஆறாம் விரலே)
மற்றோர் கையில் இருபுறமும் - நீ
. மணிபோல் ஆடிக் குலுங்குவதைச்
சற்றே கண்டேன் ! நினைவிழந்தேன் - என்
. சகமே நின்று போனதன்று !
கற்றோர் கடவுள் காளிதமை - என்
. கைகள் வணங்கும் நேரத்தில்
பெற்றி ருப்பாய் முன்னிலையை ! - அப்
. பேற்றை நானும் பறித்ததனால், (ஆறாம் விரலே)
உருவில் சற்றே பெருத்திருப்பாய் ! - உனக்
. குரிய நகந்தான் வளர்ந்திருக்கும்
பெரிதாய் நீயின் றிருந்திருந்தால் - தனிப்
. பேரே நானும் பெற்றிருப்பேன் !
கருவில் எனக்குப் பாசத்தால் - அக்
. கடவுள் கொடுத்த உயர்பரிசே !
பெருமை நீயென் றெண்ணாது - வலிப்
. பேழை நீயென் றெண்ணியதால் (ஆறாம் விரலே)
கொடுத்தோன் மீது குறையில்லை - அதைக்
. கொண்ட என்மேல் தவறில்லை
எடுத்தோர் மீதும் பழியில்லை - விரல்
. எடுக்கச் சொன்னார் மேலில்லை
வடித்துக் கண்ணீர் பொங்கவழும் - இம்
. மனத்தின் மீதே பிழையெல்லாம் !
கொடுத்தான் எடுத்தான் இதையிங்கே - விதி
. கொள்ளும் ஆட்டம் என்போமே ! (ஆறாம் விரலே)
-விவேக்பாரதி