வென்றுவிட்டோம்

"ஜல்லிக்கட்டு வேண்டும்" என்ற போராட்டத்தில் வெற்றி கொண்ட பிறகு எழுதியது.....

அறத்தினால் வென்று விட்டோம்
. அடுத்தினி ஒவ்வொன் றிற்கும்
பொறுப்புடன் ஒன்று சேர்ந்தெப்
. பொழுதுமே வெற்றி காண்போம் !
மறுப்பதவ் விறையென் றாலும்
. மானுடக் குறியென் றாலும்
ஒறுத்திடல் செய்யோம் ! அன்பால்
. ஓங்கிநல் வெற்றி காண்போம் !

அமைதியால் வென்று விட்டோம் !
. அரசுசெய் குற்றம் தன்னை
நமதுயர் மாண்பி னாலே
. நானிலத் தெடுத்து ரைத்தோம் !
குமைந்துளே கிடந்த துக்கம்
. குறைந்திட வென்று விட்டோம் !
இமயமே அதிர்ந்து போக
. இளைஞர்கள் வென்று விட்டோம் !

கூட்டமாய் வென்று விட்டோம் !
. குறைகளும் தீர்ந்தோம் ! வாய்மை
ஈட்டமாய் வென்று விட்டோம் !
. இனியதாய் வென்று விட்டோம் !
வாட்படை வில்லி னாலே
. வளைப்பதோர் வெற்றி இல்லை !
ஆட்படை கொண்டு வென்றோம்
. அறிவினால் வென்று விட்டோம் !

வாய்மையால் வென்று விட்டோம்
. வழக்கையெ திர்த்தோம் ! நம்மை
ஏய்த்தவர் வேர்த்துப் போக
. ஏற்றமாய் வெற்றி கண்டோம் !
வாய்த்தநல் அறிவி னோடு
. வலிமிகும் உணர்வை எல்லாம்
பாய்ச்சிநாம் வென்று விட்டோம்
. பாருக்கே எழுச்சி ஆனோம் !

ஒன்றிநாம் வென்று விட்டோம்
. ஒருகுறி ஒன்றே சிந்தை
என்றுரைத் தெழுந்து வந்தோம்
. எங்கணும் புகழ்ப டைத்தோம் !
இன்றுநாம் வென்று விட்டோம் !
. இனிநமக் கெங்கும் வெற்றி !
நன்றுசெய் தோமே ! தோழா !
. நாமினி களிப்போம் ! வாடா !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (27-Mar-17, 12:33 am)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 50

மேலே