பகலில் ஓர் வெண்ணிலா

.........பகலில் ஓர் வெண்ணிலா........
ஏழு வண்ண வானவில்லில்
எட்டாவது நிறமாய் இணைந்து
கொண்ட வெள்ளை நிலவு
அவள்...
இழந்த மல்லிகையின் வாசத்தை
தினம் நுகர்ந்து நகர்த்திடும்
நொடிகளில் கண்ணீருக்குள்
ஓவியமாகும் இளைய நிலவு
அவள்...
தூரத்து நிலவாய் ஒதுக்கிடும்
சமூகத்தில் அமாவாசையையும்
பௌர்ணமியாக்கிடும்
முழுமதி அவள்...
இறைத்தூரிகை வரைந்த
ஓவியத்தில் கறை படியாமல்
தப்பிக் கொண்ட வெள்ளைக்
காகிதம் அவள்...
விதி செய்த சதிவலையில்
மங்கலநாண் இழந்து
மதியாகிப் போனவள்
பகலிலும் பவனி வருகின்றாள்
வெண்ணிலவாகவே அவள்...
விடியாத இரவுகளில் நிலவோடு
தூங்குகிறாள்
ஓயாத கதைகள் நடுவில்
பகல்நிலவாகத் தன்
வாழ்க்கையோடு தினம்
மல்யுத்தம் புரிகின்றாள்....
வெண்ணிலவாக அவள்
இருந்தும் தூற்றும் சமூகத்தின்
மத்தியில் வெண்ணிறச்
சேலை அணிந்த விதவையே
அவள்...
-உதயசகி-