வாழ்வின் வண்ணங்கள்
உச்சி வானங்கறுத்து பொழியும்
******மழையினில் நெல்மணிகள் முளைத்திட
நிச்சம் நோய்கள் நெருங்காது
******வளரும் பயிர்களைக் காத்திட
பச்சை வண்ண மேலாடையில்
******நிலமகள் அசைந்து ஆடுகையில்
இச்சையோடு பார்த்தே மயங்கும்
******மண்ணில் உழவன் விழிகள்......
விளைந்து நிற்கும் கழனியும்
******மாடிகளாய் மாறுகின்ற சூழலில்
வளைந்து கொடுக்காது வாழ்வு
******வளம்பெற இதயம் துடித்திட
இளைத்த மேனியுடன் உழைத்து
******நம்பிக்கையின் வேரைப் பிடித்தும்
களைகள் நீங்கியதும் வெயிலில்
******வாடுதல் போலுளம் வாடுகிறான்......
தேகம் சிந்தும் வியர்வையில்
******வீட்டில் நிறையும் செல்வங்கள்
மேகம் பொய்த்து விட்டதால்
******வெறுங்கூடாகி வறுமையும் வாட்டிட
தாகம் தணிக்க நீரின்றி
******தழலென சுடும் அவனியில்
சோகமது விசமாய்த் தழுவிட
******நெஞ்சடைத்து விவசாயி மரிக்கிறான்......