தாய்மடி
"தாய்மடி"
கருவில் உதிர்ந்தாலும்
கருணை மலரின் வாசந்தனை
நுகர்ந்து களிக்காதவள்...
தாலாட்டுக் கேட்காது
தாய்மடி உறங்காது
தனிமையின் நெருப்பில்
தவழ்ந்திடும் வாச முல்லையவள்...
பாசம் எனும் நூலொன்றை
படித்து அறிந்தாலும்
வாழ்ந்து அனுபவிக்க
வாய்ப்புகள் கிடைக்கப் பெறாவள்...
நிலாச்சோறு உண்டாலும்
அன்னையின் விரல் கடிக்கும்
சுகமதனை இழந்தவள்...
இதயத்தின் அலையில்
உணர்வுகளின் ஓயாத நீச்சலில்
அன்பின் வேரினைக் காண ஏங்குகிறாள்...
விடுதியில் வளர்ந்து
விட்டுச் சென்ற தாயவளின்
விரல்கள் பிடிக்கத் துடிக்கிறாள்...
காணாத தாயின் முகம்
கற்பனையில் கொண்டு வந்து
பூமியின் மடியில்
தனை ஈன்ற அன்னைக்கு
புது உருவம் கொடுக்கிறாள்...
மண்ணில் கிறுக்கிய கோடுகள்
விலை மதிப்பற்ற ஓவியம்
அதன் மடியேனும்
இவள் தலை சாய்ந்து
இல்லாமல் போன சுகத்தை
உளத்தால் உணர்கிறாள்...
பார்க்கும் விழிகளைக்
கண்ணீரில் நனைந்திட வைக்கிறாள்......