தாய்மையின் குரல்

என்னவனும் நானும்
காெண்ட காதலால்
என் கருவறை மலர்ந்தது..
என்னவனின்
அகமும் முகமும் மலர்ந்திருக்க..
மசக்கையால் மயங்கித் தெளிந்த
எனை உச்சி முகர்ந்தான்.
அதில் என் நாணமும் நாணிற்று..
எனக்குள் ஓர் புது உயிர்.
எனக்குள் ஓர் புத்துணர்ச்சி.
மகிழ்ச்சியின் மலர்ச்சியால்
நெகிழ்ந்து நின்றேன்
எனையும் மறந்து.
கருவே!
நீ ஈசனின் மறுவுருவமா அல்லது
நீ ஈசையின் மறுவுருவமா தெரியாது.
ஆனால் என் பெண்மையை
முழுமைப்படுத்த பிரம்மன்
எனக்களித்த வரம் நீ !
கண்மணியே ! நான்
உன் இதயத்துடிப்பை உணர்கிறேன்.
என் கருவறை வாசத்தை நீ
சுவாசிப்பதை உணர்கிறேன்.
நீ வளர்பிறையாக வளர்வதை
உணர்கிறேன்.
என் கதகதப்பில் உன் தூக்கத்தை
உணர்கிறேன்.
நான் கதைப்பதையெல்லாம் நீ
கேட்பதையும் உணர்கிறேன்.
உன் சந்தாேஷத்தை உணர்கிறேன்.
என் வளையலாேசையின் சங்கீதத்தை நீ ரசிப்பதையும்
உணர்கிறேன்.
உன் ஒவ்வாேர் அசைவுகளையும்
உணர்கிறேன்.
உன் அப்பா தரும் முத்தத்திற்கு நீ
தரும் பதில் முத்தத்தையும்
உணர்கிறேன்.
உனை மாெத்தமாக உணர்கிறேன்.
நம் இருவருக்கு மட்டும்
உரிய உலகில்
நுண்ணுணர்வுகளாலேயே
பாசப்பரிவரதனைகள் பல
அரங்கேற்றினாேம்.
ஐயிரு திங்களும் தவமாய்க்
காத்துக்கிடக்கிறேன்.....
உனை ஈன்றெடுக்க.
உன் அழகு முகம் காண...
உனை என் இரு கைகளால் ஏந்திட...
உன் முதல் குரலைக் கேட்க...
உனை முத்தமிட...
உனை வாஞ்சையாேடு அள்ளி அணைக்க...
உன் மென்மையான ஸ்பரிசத்தை வருட...
உன் புன்னகையால்
நான் புன்னகைக்க...
நம் உறவுகளை மகிழ்விக்க...
நீ முறிக்கும் சாேம்பலுக்கு
ரசிகையாக பல
நித்திரைகளையும்
தியாகம் செய்ய..
என் தாய்ப்பாலாேடு
தமிழ்ப்பாலும்
அறிவுப்பாலும்
வீரப்பாலும்
சேர்த்து உனக்கு ஊட்டிட...
உனை ஈன்றெடுக்கும் நாெடிதனில்
இடரேதும் வரினும்
என்னுயிரையும் சுகமாய்த் துறந்து
உன்னுயிரைத் திடமாய்க் காத்து
இம்மண்ணுயிரையும்
மன்னுயிரையும்
பேண இப்பிரபஞ்சத்தில்
ஜனனமெடுத்து நீ
விண்ணுயர சாதனைகள் பல
புரிவாய் என் கண்மணியே !