கல்யாணமே இரு மனதோடுதான் - பகுதி 1

........................................................................................................................................................................

.....................................................கல்யாணமே இரு மனதோடுதான்

பகுதி 1

டியூப் லைட் போடாமல் ஜன்னலோர வெளிச்சத்தில் அமர்ந்து கிழிந்து போன தன் சுரிதாரை தைத்துக் கொண்டிருந்தாள் செங்கமலம். கண்கள் அடிக்கடி கடிகாரம் பக்கம் போய் வந்தன. இப்போது மணி காலை எட்டு ஐந்து.. எட்டு ஐம்பதுக்கெல்லாம் வீட்டை விட்டுக் கிளம்பி மினி பஸ் பிடித்தால் ஒன்பதரைக்கு திருவாரூர் போய் விடலாம்.... பத்து நிமிடம் நடந்தால் அவள் வேலை பார்க்கும் எம்ஜிஎஸ் சேவை மையம் வரும்..

அவசர அவசரமாகத் தைத்ததில் விரலைக் குத்திக் கொண்டாள். இன்னும் சாப்பாடு எடுத்து வைக்க வேண்டும்.. உடை மாற்ற வேண்டும்.. தயாராக வேண்டும்..

அவள் அப்பாவுக்கு ஒரு தூக்கிலும் தனக்கு ஒரு மூடி போட்ட சின்னப் பாத்திரத்திலும் சாப்பாடு எடுத்துக் கொண்டாள்.. அம்மாவிடம் சொல்லிக் கொண்டு மினிபஸ்சுக்கு அவள் காத்திருக்கிற நேரத்தில் அவளைப் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைந்து விடலாம்...

செங்கமலத்தின் குடும்பம் வசிப்பது என்கண் என்கிற ஊரில். செங்கமலத்தின் அப்பா திருவாரூரில் ஹார்டுவேர் கடை வைத்திருப்பவர்.. காலை எட்டு மணிக்கு புறப்பட்டாரானால் வீடு திரும்ப இரவு பதினோரு மணியாகும்.. செங்கமலத்தின் தங்கை தீபிகா தஞ்சாவூரில் நர்சிங் படிக்கிறாள்..

செங்கமலத்துக்கும் கல்லூரி சென்று படிக்க ஆசைதான்.. குடும்ப சூழ்நிலை.. அவள் அம்மாவுக்கு கர்ப்பப் பை எடுத்திருந்த சமயம் அது.. அம்மாவை கவனித்து வீட்டைப் பராமரிக்க அவள் படிப்பு நிறுத்தப்பட்டது.. இப்போது அஞ்சல் வழிக் கல்வி முறையில் சமூகவியல் படித்துக் கொண்டிருக்கிறாள்..

திருவாரூரில் எம்ஜிஎஸ் சேவை மையத்தில் ஒரு வேலை வாய்த்தது.. மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பளம்.. வாரத்தில் ஏழு நாளும் வேலை.. வேலை நேரம் காலை பத்து மணியிலிருந்து மதியம் மூன்று மணி வரை.. மூன்று மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை இன்னொரு பெண் வருவாள்- அஜந்தா..
சேவை மையத்தை திறந்து வைத்து, கழிப்பறையை சுத்தப்படுத்துவது முதல் வங்கியில் காசு போடுவது, பயனாளிகள் சேவை மற்றும் இரவில் மையத்தை மூடி சாவியை பத்திரப்படுத்திக் கொள்வது வரை சகலமும் இந்த இரண்டு பெண்கள்தாம்.

இருவர் பணியை ஒருவர் மேற்கொண்டால் அந்த இன்னொருவர் விடுமுறையில் போகலாம்.. மற்றபடி தாமதமாக வந்தாலோ, திடுதிப்பென்று விடுப்பு எடுத்துக் கொண்டாலோ சம்பளத்தில் துண்டு விழும்.. துண்டு மட்டுமல்ல... பல சமயம் வேட்டி சேலை கூட விழலாம்...

பெண் என்றால் வர்ணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இக்கதையை எழுதுவதும் ஒரு பெண் என்பதால் உயர்வு நவிற்சி அணிக்கு இங்கு இடம் கிடையாது.. செங்கமலத்துக்கு இந்திய உயரம் ; தமிழ்நாட்டு நிறம்.. சற்றே ஒட்டிய கன்னங்கள்; எடுப்பான மூக்கு; அதில் வளையம் போன்று மூக்குத்தி. மூக்குத்தியின் ஒற்றைக்கல் கீழே சரிந்து விழப் போகிற பிரமையைக் கொடுக்கும். நீள நீள விரல்கள், கம்பீர நடை. அவள் உண்மை வயது இருபத்தொன்று என்றாலும் பார்க்க இருபத்தேழு, இருபத்தெட்டு போல் தெரிவாள்..! முகத்தின் ஏதோ ஒரு சோகம் கல்யாண ஏக்கமோ என்று எண்ண வைக்கும்.. (ஒரு வேளை கல்யாணமாகி இருந்தால் இந்த முகத்தின் சோகம் குழந்தை ஏக்கமாக கொள்ளப்படலாம்.. ) இருப்பினும் அந்தப் பருவ வயதுக்கேற்ற ஆசைகள் அவளுக்கில்லை. அவள் அடி மனதில் குச்சி ஐஸை சப்பியபடி, பாவாடை சரசரக்க என்கண் முருகன் கோயில் பிரகாரத்தில் குதியாட்டம் போட்டு ஓட மாட்டோமோ போன்ற ஏக்கங்கள்தான் இருந்தன...!

அவள் வேலைக்குப் போக அனுமதிக்கப்பட்டது குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காகத்தான். ஆனால் வெளியில் சொல்வது என்னவெனில் “ படிச்ச பொண்ணு.. போரடிக்குதுன்னா..! ! அழுவாச்சி சீரியலையே எவ்வளவுதான் பார்ப்பா..? அதுக்காக அனுப்பறோம் ” என்பார்கள். இந்த இரண்டாயிரத்திப் பதினேழிலுமா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.. என்ன செய்ய?? தமிழ்நாட்டின் வளர்ச்சி எல்லா இடங்களிலும் ஒன்று போலில்லை...! !

வேலைக்குப் போவதனால் அவள் நிலையில் துளி மாற்றமும் ஏற்படவில்லை. சம்பளம் அவள் வங்கிக் கணக்கில் வந்த ஏழு நாட்களுக்குள் அவள் அப்பாவின் கைக்கு மாறி விடும். குறைந்த பட்ச இருப்புத் தொகை மட்டுமே அவள் கணக்கில் இருக்கும்.. அவளுடைய தேவைகளுக்கு, உரிய வழி முறையாக - அதாவது அம்மாவின் மூலம்- அப்பாவிடமே அவ்வபோது வாங்கிக் கொள்ள வேண்டும்..

வேலைக்குப் போகிற பெண் என்பதற்குண்டான எந்த பிரத்யேக சலுகையும் அவளுக்குக் கிடைத்ததில்லை. வீட்டு வேலைகளை முடித்து விட்டுத்தான் வெளியில் கிளம்ப வேண்டும்.. பணியிடத்தில் நெருக்கடி இருந்தாலும் லீவு போடு என்றால் போட்டுத்தான் ஆக வேண்டும்.. முடியாது; அப்புறம் வேலை போய்விடும்..என்கிற பிரம்மாஸ்திரத்தை வீசினால் அப்பா ஓரிரு முறை கேட்கலாம்.. சம்பாதிக்கிற திமிர்ல பேசறா என்ற முணுமுணுப்போடு...

இத்தனைக்கும் ஒரு காலத்தில் அப்பாவின் செல்லம் அவள்....! ப்ளஸ் டூ படித்து முடித்த பிறகு மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பமாகியது. தொடக்கத்தில் வந்த இரண்டு மூன்று நல்ல வரன்களை அப்பா அற்ப காரணங்களுக்காக நிராகரித்தார்.. பிற்பாடு வந்த வரன்கள் வரதட்சணை விவகாரத்தால் அமையாமல் போயின... ஒவ்வொரு வருடமும் அவளுக்கு வயது ஏறும்போது ஐந்து பவுனும் ஒரு லட்ச ரூபாயும் வரதட்சணைத் தொகையில் கூடிக் கொண்டே போனது.. அதனோடு ஈடு கொடுக்க முடியாமலும் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமலும் வறட்டு கௌரவத்தை முகமூடியாக்கி வளைய வந்தார் அவள் அப்பா...

உற்றார் உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் மகளுக்குக் கல்யாணம் எப்போது என்று துளைத்தெடுத்தனர். அந்தக் கேள்வியையே ஆயுதமாக வைத்து அவள் அப்பாவை குத்திக் காட்டுகிற அக்கறையில்லாத சொந்த பந்தங்களும் அதிகமாக இருந்தன.... சுயவெறுப்பிலும் மன உளைச்சலிலும் சிக்கித் தவித்த அப்பா செங்கமலத்தை ராசியில்லாத பெண்ணென்றும் துக்கிரி, விளங்கா மூஞ்சி என்றும் கரித்துக் கொட்டி தன் இயலாமையைத் தணித்துக் கொண்டிருந்தார்.

கல்யாணம் என்கிற ஒன்று ஆகவில்லையென்பது செங்கமலத்துக்கோ, அவள் தாய்க்கோ பெரிய குறைபாடாகத் தெரியவில்லை.. இன்னும் சொல்லப் போனால் செங்கமலம் அதைப் பற்றி யோசித்தது கூட இல்லை. ஆனால் அந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு வீட்டுத் தலைவர் வீசுகிற சுடுசொற்கள் அந்த வீட்டின் அன்றாட நிகழ்வுகளை நரகமாக்கிக் கொண்டிருந்தன. செங்கமலம் ஆரம்பத்தில் மனமொடிந்து அழுதாள்.. அவள் அழுகையைத் தாங்க முடியாத அன்னை “அவளை ஏங்க கரிச்சு கொட்டறீங்க.. நல்ல வரனை பேசத் தெரியாம பேசி, ஒரு பவுன் பேரத்துல விட்டுத் தொலச்சது நீங்கதானே” என்று ஒரு முறை கேட்டு விட்டார்.. அவ்வளவுதான்..! ! அம்மாவுக்கு அடி விழுந்தது...! ! அன்று முழுக்க அம்மாவும் செங்கமலமும் அசிங்க அசிங்கமாகத் திட்டு வாங்கினார்கள்..!! அன்றிரவு ஃபேனில் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்க முயன்றார் அவள் அப்பா..! ! பதறிப் போய் மருத்துவமனை அது இதுவென்று அலைந்து காப்பாற்றினார்கள்.. அதிலிருந்து அப்பா என்ன சொன்னாலும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடுவதுதான் இருவரின் பழக்கமானது..! !

மினிபஸ் வந்து விட்டது..

சேவை மையத்தில் வேலையில் ஊன்றிப் போனாள் செங்கமலம்.. அந்த ஈ மெயிலை அப்போதுதான் கவனித்தாள்.. அடடா, சமூகவியல் நேர்முக வகுப்புகள் நடைபெறும் இடம், தேதி குறிப்பிட்டு வரச் சொல்லி இருந்தார்கள்.. ஐந்து நாட்கள் தஞ்சாவூரில் நேர்முக வகுப்புகள் நடைபெறப் போகின்றன. சீனியர்களின் செமினார்களோடு துறை வல்லுநர்களின் பேச்சும் இடம் பெறப் போகின்றது. நல்ல சந்தர்ப்பமாயிற்றே.. நேர்முக வகுப்புக்கு இன்னும் இரண்டு வாரமிருக்கிறது... தவற விடக் கூடாது...

அப்பா அம்மாவிடம் அனுமதி வாங்க வேண்டும்..

ஐந்து நாட்களுக்கு இந்த அஜந்தாவை ட்யூட்டி பார்க்கச் சொல்ல வேண்டும்..

தங்கைக்கு ஃபோன் செய்து அவள் தங்கும் ஹாஸ்டலில் ஒரு கெஸ்டாகத் தங்க இடம் ஏற்பாடு செய்யச் சொல்ல வேண்டும்..

செலவுக்கு ஒரு இரண்டாயிரம் ரூபாயாவது தேவைப்படும்.. அப்பாவிடம் வாங்க வேண்டும்..

சேவை மைய நிர்வாகிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்...

சரி.. சின்னச் சின்ன விவரங்கள் வேண்டாம் என்று கூறுகிற பொறுமையில்லாத வாசகர்களுக்காக இந்த வாக்கியம்..

என்கண்ணிலிருந்து தஞ்சாவூர் ஒன்றும் அவ்வளவு தொலைவு இல்லை.. இருந்தாலும் அது செங்கமலத்துக்கு சந்திர மண்டலத்துக்குப் போவதைப் போல அவ்வளவு மன அழுத்தத்தைத் தந்திருந்தது..

தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (5-Apr-17, 11:12 am)
பார்வை : 381

மேலே