ஒரு காதல் கடிதம்

அன்புக்காதலனுக்கு,

அகத்தினை வடித்திட நானும் அயராது தேடுகிறேன்
அகராதியிலும் அகப்படவில்லை வார்த்தைகள்..!!

அங்குமிங்குமாய் எழுத்துக்களை இழுத்துப்பிடித்து
எழுதுகிறேன் இக்கடிதம்..!!

ஆசை நாயகனே..!!

நீளும் ஆசைகளில் உன் நீங்கா நினைவுகள்
நாளும் வளர்ந்து வந்து என்னை தேளாய் கொட்டுகிறது..!

கொஞ்சி விளையாடி குறும்பு செய்தே உன்னை வென்றிட வேண்டுமென்று
வஞ்சியெனக்கு வாலும் வளர்ந்துகொண்டிருக்கிறது..!

நின் முத்தங்களை சுமந்துவந்த முத்திரைத்தாளெல்லாம்
என் மூச்சுக்காற்றில் வாடுகிறது..!

நாணம் விடுத்து நானும் உன் மீசை கடித்தே
என் ஆசை தீர்க்க அனுமதி கேட்கிறேன்..!

அஞ்சனம் தீட்டிய விழிகளும் அஞ்சலகம் தேடியே அலைகிறது..!!
தனிமை துரத்தும் வேளை தபால் நிலையத்திலே தஞ்சம் புகுந்து விடுகிறேன்..!!

கன்னம் தின்னும் எண்ணம் உனக்கில்லையா?
உன் இல்லம் புகுந்திடும் வரம் எனக்கில்லையா?

என் நேசம் சொல்லி நானும், பாசம் தந்து நாளும்
காதல் கடலில் நாமும் நீந்திட வேண்டுமே..!

எதிரில் நீ வாராமல் இமைகளும் கனக்கிறது..!!
இதயமும் நோகிறது..!! இனியும் என்னை வதைக்காதே..!!

விரைவில் வந்துவிடு..!!
இவ்வீணைக்கு உயிர் கொடு..!!

உன் உதயம் வேண்டும்
உன்னுள் பாதி

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (5-Apr-17, 2:51 pm)
பார்வை : 411

மேலே