எங்கே எனது கவிதை
=====================
எங்கே எனது கவிதை...
அதிகாலை பள்ளிக்கூடத்திற்குச் செல்ல
அடம்பிடித்து அழுகின்ற குழந்தையைப்போல்
அழகான வெள்ளைத் தாளில் வந்து
உட்கார அடம்பிடிக்கிறதே .. எங்கே எனது கவிதை
பருவத்து எழிலை எல்லாம் பதுக்கிவைத்து
பார்ப்போரை வசீகரிக்கும்
பஞ்சவர்ணக்கிளியைப் பற்றியதாகவோ
பசிக்காக அழுகின்றக் குழந்தைக்கு
பாலூட்டப் பாய்விரிக்கும்
பரிதாபக்காரியைப் பற்றியதாகவோ
உழைப்பாளர் படுகின்ற துயரத்தின் வடுக்களின்
உள்சென்று உட்கார்ந்து அதுசொல்லும்
உற்காயம் பற்றியதாகவோ
உழைக்காமல் உட்கார்ந்து ஊரார் உழைப்பை
உறிஞ்சிக் குடிக்கின்ற உதவாக்கரைகளின்
உப்பிய உடம்பைப் பற்றியதாகவோ
ஓடுகின்ற நதி குடைந்து மணல் அகழ்ந்து
ஊருக்குள் விற்று இயற்கையை சீரழிக்கும்
ஊனமுற்ற மனங்களைப் பற்றியதாகவோ
காசுக்காய் கல்வி சாலைகள் அமைத்து
வியாபாரம் செய்கின்ற கள்வர்களின்
கைங்கரியம் பற்றியதாகவோ .
காசின்றி வாழாமல் கண்ணீர் சொரிகின்ற
ஏழைக் குமரிகளின்
இதயக் குமுறல்கள் பற்றியதாகவோ
வருத்தமென்று வரும்பேரை
வகையற்ற நோய்பேர் சொல்லி
முறையற்ற சிகிச்சை மூலம் பணம் பிடுங்கும்
மோகத்தில் திறக்கப்படும் மருத்துவமனைகள் பற்றியதாகவோ
இல்லை மதமென்றும் இனமென்றும் சாதியென்றும்
மனிதனை மனிதன் பிரித்துப் பார்க்கின்ற
மனிதாபிமானமற்ற செயல் பற்றியதாகவோ
இல்லை இந்த சமூகத்தின் கண்களைத் திறக்கும்
திறவுகோலாகவும் கூட இருக்கலாம் ..
என் கவிதையே தனித்திருக்கும்
இந்த ஏகாந்த பொழுதில்
காத்திருப்புக்களில் வாராமல் போகும் காதலியாக
இன்னும் எண்ணத்தில் முத்தமிடாததேனோ?
*மெய்யன் நடராஜ்