தில்லை

சிதம்பரம் என இன்று அழைக்கப்படும் ஊர் முற்காலத்தில் தில்லை மரங்கள் அடர்ந்திருந்த காரணத்தால் தில்லை என அழைக்கப்பட்டது.மத்யந்தன முனிவரின் மகன் புலிக்கால் முனிவர் என்ற வியாக்கிரபாதருக்கும், ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் பதஞ்சலி முனிவருக்கும் தைப்பூசத் திருநாள் அன்று தில்லையில் இறைவன் ஆனந்த நடனத் திருக்காட்சி அளித்தான் என கோயில்புராணம் கூறும். அவர்களுக்குக் காட்சியளித்த அன்று தொட்டு இறைவன் அங்கே ஆனந்தத் தாண்டவ மூர்த்தியாய் எழுந்தருளி ஆன்மாக்களுக்கு அருள் வழங்கி வருகின்றான்.

இருமுனிவர்களுக்கும் இறைவன் காட்சியளித்த இடம் சித்சபை என இன்று அழைக்கப்படுகிறது. இதுதான் ’திருச்சிற்றம்பலம்’ ஆகும். இங்குதான் ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தி எழுந்தருளியுள்ளார். இதன் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.சிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம்.நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் கூறுகிறது. அவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன. அந்தச் சிறு வெளியினை நம் சாஸ்திரங்கள் ‘தகர ஆகாயம்’ எனக் குறிப்பிடுகின்றன. தகரம் – சிறுமை. ஆகாயம் – வெளி. இதுவே தமிழில் ‘சிற்றம்பலம்’ எனப்படுகிறது.இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக கோயில்புராணம் எடுத்துரைக்கின்றது.

சிதம்பரம்:

சித் – அறிவு; அம்பரம் – வெளி; பஞ்சபூதங்களுள் ஒன்றான ஆகாயம் அல்ல இது; அறிவு மயமான வெளி என்று சுட்டிக்காட்டுவதற்காக இவ்வாறு கூறினர் நம் முன்னோர்.இதனைப் பெரியபுராணத்துள் தில்லைவாழ் அந்தணர் புராணத்தில் “சிற்பர வியோமம் ஆகும் திருச்சிற்றம்பலம்” எனவும் திருஞானசம்பந்தர் புராணத்தில்,”அண்ணலார் தமக்குஅளித்த மெய்ஞ்ஞானமேஆன அம்பலமும் தம்,உள்நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒருபெரும் தனிக்கூத்தும்” எனவும் சேக்கிழார் சுவாமிகள் கூறுகிறார்.சிதம்பரம், திருச்சிற்றம்பலம் என அழைக்கப்படுவதை இங்கே ’சிற்பர வியோமம்’ , ‘மெய்ஞ்ஞானமே ஆன அம்பலம்’ எனத் தெளிவுபடுத்துகிறார் சேக்கிழார்.

திருச்சிற்றம்பலத்தின் அமைப்பு:

சாதாரணமாக எந்தவொரு சிவாலயத்திலும் மூலஸ்தானம் எனப்படும் கருவறையில் சிவலிங்கம் காணப்படும். அந்தக் கருவறையைச் சுற்றி அமைந்திருக்கும் கோயிலில் இறைவனின் திருவுருவங்களான தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சோமாஸ்கந்தர், நடராஜர், பைரவர், பிட்சாடனர் ஆகியோர் வீற்றிருப்பர்.

ஆனால் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்தில் ஆடல்வல்லானே முதல் மூர்த்தியாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறார். சிவலிங்க மூர்த்தியான திருமூலநாதர் சித்சபைக்குப் பின்புறம்தான் எழுந்தருளியிருக்கிறார்.

மகாசதாசிவ தாண்டவேசுவரர்:

சிவாகமங்களில் இறைவன் ‘மகாசதாசிவ தாண்டவேசுவரர்’ எனப் போற்றப்படுகிறார். மகுடாகமம் 34 ஆவது தத்துவ மூர்த்தியான சதாசிவ மூர்த்திக்கு மேற்பட்டவராக தாண்டவேசுவரரை நியசிக்கச் சொல்கிறது. சர்வஞானோத்தர ஆகமம் “ பதியாவார் சதாசிவர், இவர் மந்திர வடிவினரும், பஞ்சகிருத்தியங்களைச் செய்பவருமாயிருக்கிறார்” எனக் கூறுகிறது.
காரணாகமமும் மகுடாகமமும் சதாசிவ தாண்டவேசுவரரையே 36 ஆம் தத்துவ முடிவிலுள்ள பரம ஆகாய அத்யட்சர் என்கின்றன.

இறைவன் உயிர்களுக்காக 9 வித வடிவங்கள் எடுக்கின்றான். பிரமன், விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், விந்து, நாதம், சக்தி, சிவம் என்பன அவை. இந்நிலையை ’நவந்தரு பேதம்’ என சைவ சித்தாந்த நூல்கள் கூறும். இந்த ஒன்பது வடிவங்களுக்கும் மேலான நிலைதான் மகாசதாசிவ தாண்டவேசுவரர்.

இதனை,” எந்த நடராச மூர்த்திக்கு சதாசிவ மூர்த்தி ஆசனமாக அமைகிறாரோ அவரே, நவந்தரு பேதத்துக்கு மேலானவர். இந்த நவந்தரு பேதங்களும் எவனிடத்தில் ஒடுங்குகின்றனவோ அவனே துவாத சாந்தப் பெருவெளியில் பரமானந்தத் தாண்டவம் புரிபவன். ஆதலால் தாண்டவ மூர்த்தியே மிக மேலானவர் என்பதில் ஐயமில்லை. ஆகவே ஞானி தாண்டவ மூர்த்தியையே இம்மை மறுமை இன்பங்கட்காக தியானிக்கக் கடவன்” என ஞானானந்த பரிபாஷை எனும் நூல் கூறுகிறது.

இதனால்தான் தில்லை ஆனந்த நடராஜப் பெருமானின் வழிபாட்டின் போது ”நடராஜ ராஜ ராஜர் வருகிறார்” எனும் கட்டியம் கூறும் மரபு உருவானது. எனவே இந்த அடிப்படையிலேயே தில்லை நடராஜப் பெருமான் மூல மூர்த்தியாக வழிபடப்பெறுகிறார்.

திருச்சிற்றம்பலத்தின் சிறப்பு:

சாதரணமாகக் கருவறை என்பது ஒரு கலசம் உடையது. கருவறைக்கு அதிஷ்டானம், பாதம், பிரஸ்தரம், கண்டம், சிகரம், ஸ்தூபி என்று 6 உறுப்புகள் உண்டு. இதிலிருந்து வேறுபடுவது சபை. திருச்சிற்றம்பலம் சபை ஆதலினால் அதற்கு 9 கலசங்கள் உள்ளன. அதில் கண்டம் என்ற உறுப்பு தவிர பிற காணப்படுகின்றன. திருச்சிற்றம்பலம் மரத்தாலானது. இது அதன் தொன்மையைக் காட்டுகிறது.

தில்லையில் மட்டுமே 5 சபைகள் உள்ளன. ஆயிரங்கால் மண்டபம் ஆன ராஜசபை, உற்சவ மூர்த்திகள் வீற்றிருக்கும் தேவ சபை, நிருத்த சபை, கனக சபை, சித்சபை என்பன. இவை ஐந்தும் அன்ன, பிராண, மனோ, விஞ்ஞான, ஆனந்த மய கோசங்களைக் குறிப்பன.

ஸ்ரீமத் ஆனந்த நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள திருச்சிற்றம்பலம் தங்கப்பூச்சு அமைந்த செப்பு விமானத்தில் 9 கலசங்களுடன் கிழக்கு மேற்காக நீள் சதுர வடிவிலானது. தெற்குப்பகுதி தவிர மற்றப் பகுதிகள் சந்தனப் பலகைகளால் மூடப்பட்டுள்ளன.

ஆனந்த நடராஜப் பெருமான் வீற்றிருக்கும் மேடை தரை மட்டத்திலிருந்து சற்றேறக்குறைய 5 அல்லது 6 அடி உயரத்தில் உள்ளது. இதன் கீழ் முதல் மேல் வரையில் உள்ள கற்கள் மாத்ருகாட்சரங்கள் என்பர்.

சபையின் வாயில் தெற்குப் பகுதியில் மட்டுமின்றி கிழக்கு மேற்குப் பகுதிகளிலும் இரு வாயில்கள் இருப்பது இக்கோயில் இதயத் தானம் என்பதைக் குறிப்பதற்காக.

திருச்சிற்றம்பலத்தின் முன்புறம் கனகசபை அமைந்துள்ளது. அடியார்கள் இங்கிருந்தே நடராஜப் பெருமானை வணங்குவர். இந்த கனகசபையில் 9 வாசல்கள் உள்ளன. இவை நமது உடலில் உள்ள 9 வாசல்களைக் குறிக்கும். இந்த கனக சபை பிரம்மபீடப் பகுதியாகும். இதற்கு எதிரம்பலம் எனவும் அழைக்கப்படும்.

கனக சபையில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களாகும்.

அச்சபையில் அன்னப் பாவாடை பரப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 பெரிய தளவரிசைக் கற்கள் பஞ்ச பூதங்களாகும்.

கனகசபையிலிருந்து திருச்சிற்றம்பலத்திற்கு ஏறும் 5 வெள்ளிப் படிகளும் பஞ்சாட்சரப் படிகள் எனப்படும். இப்படிகளின் இருபக்கங்களிலும் யானை உருவம் இருப்பதால் திருக்களிற்றுப்படி எனவும் அழைக்கப்படும்.

கனகசபையிலிருந்து திருச்சிற்றம்பலம் எனப்படும் சித்சபைக்கு செல்லும் நுழைவாயிலில் பஞ்சாட்சரப் படிகளுக்கு மேலே அமைந்த கதவினை அவித்யை என்பர். இருபுறமும் சுபாகு, விமலன் எனும் இருதுவாரபாலகர்கள் உள்ளனர். இவ்வாயில் இதயவாயில் எனப்படும்.

திருச்சிற்றம்பலத்தில் 5 தெய்வீகப் பீடங்கள் உள்ளன. பஞ்சாட்சரப் படி ஏறி கால் வைக்கும் இடம் பிரம்ம பீடம். இது கால் அடி அகலமே இருக்கும்.

பிரம்ம பீடத்தை அடுத்து திருச்சிற்றம்பலத்தினுள் சற்றேறக்குறைய ஓரடி அகலமுள்ள இடத்தில் 5 தங்கத் தூண்கள் உள்ளன. இப்பகுதி விஷ்ணுபீடம் எனப்படும். இவ்வைந்து தூண்களும் பஞ்ச பூதங்களாகும்.

நடராஜப் பெருமான் முன்பு அர்ச்சகர் நின்று பூசை செய்யும் இடம் ருத்ரபீடம் எனப்படும். இது மூன்றடி அகலமிருக்கும். இங்குள்ள 28 வெள்ளித் தூண்கள் 28 ஆகமங்களைக் குறிக்கும்.

ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தியும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் பீடம் மகேஸ்வர பீடமாகும். இது ஏறக்குறைய 6 அல்லது 7 அடி நீளமும் 3 அடி அகலமும் இருக்கும். இப்பீடம் தங்கத்தால் மூடப்பட்டிருக்கும்.

மகேஸ்வர பீடத்துக்கு இருபடிகள் உண்டு. மேற்குப்படியில் சந்திரமௌலீசுவரர் ஆகிய ஸ்படிக லிங்கமூர்த்தியும், ரத்தின சபாபதி ஆகிய ரத்தினத்தினாலான நடராஜ மூர்த்தியும் தனித் தனிப் பெட்டிகளில் எழுந்தருளியுள்ளனர். மகேஸ்வர பீடத்தில் ரத்தினம் இழைத்த இறைவனின் திருவடிகள் சிவ பாதுகை எனும் தங்கத் தட்டில் இறைவனுக்கு வலப்புறம் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் நடராஜ மூர்த்தியின் வலப்புறத்தில் ஸ்ரீமுகலிங்கம் உள்ளது.

ஆனந்த நடராஜமூர்த்தியும் சிவகாமிஅம்மையும் வீற்றிருக்கும் மகேஸ்வர பீடத்தில் உள்ள 4 தூண்களும் 4 வேதங்களைக் குறிக்கும்.

சிதம்பர ரகசியம் எனப் போற்றப்படும் ஸ்ரீ ரகஸ்யம் இருக்கும் பீடம் சதாசிவ பீடம் ஆகும்.

இறைவன் ஓர் உருவும் ஒரு நாமமும் இன்றி சிற்பர வியோமமாக அண்ட சராசரங்களையும் தொழிற்படுத்தி நடத்தி வரும் ஞான வடிவமே சிதம்பர ரகசியம் ஆகும்.

திருச்சிற்றம்பலத்தினுள் இறைவனைச் சுற்றியுள்ள இடம் பிரணவப் பிராகாரம் எனப்படும். இத்திருச்சிற்றம்பலம் சுத்த வித்தை தத்துவமாகக் குறிப்பிடப்படும்.

திருச்சிற்றம்பலத்தின் மேல் அமைந்த 64 சந்தனக் கைமரங்களும் 64 கலைகளைக் குறிக்கும்.

பொன்னம்பலத்தின் தங்கக் கூரையில் உள்ள 21,600 தங்க ஓடுகள் ஒரு நாளில் மனிதன் விடும் சுவாசங்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். இவ்வோடுகளில் திருவைந்தெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓடுகளில் பொருத்தப்பட்டுள்ள 72,000 ஆணிகளும் நம் உடலில் உள்ள நாடிகளின் எண்ணிக்கையைக் குறிப்பனவாகும்.

சித்சபையின் 9 கலசங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.

இதில் உள்ள 224 அடைப்புப் பலகைகள் 224 உலகங்களைக் குறிப்பன.

சிதம்பர ரகசியத்தை கனகசபையிலிருந்து 96 துவாரங்கள் உள்ள பலகணி வழியாக தரிசிக்க வேண்டும். இந்த 96 துவாரங்கள் 96 தத்துவ தாத்துவிகங்களைக் குறிப்பன.

சித்சபையினுள்ளே இறைவன் அருவம், உருவம், அருவுருவம் எனும் 3 நிலைகளில் எழுந்தருளியுள்ளான்.

சிதம்பர ரகசியம் அருவம், ஆனந்த நடராஜ மூர்த்தி உருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம். இதனை சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணத் தொடக்கத்தில், ’உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ எனும் திருப்பாடலில் சுட்டிக் காட்டி அருளியுள்ளார்.

‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ – என்பது அருவம்.
‘நிலவுலாவிய நீர்மலி வேணியன்’ – என்பது உருவம்
‘அலகில் சோதியன்‘ – என்பது அருவுருவம்.
இப்பொருளை நமக்கு தில்லைத் திருச்சிற்றம்பலமே காட்டித் தருகிறது.

ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்தி வருடத்திற்கு இருமுறை திருவீதியுலாக் கொண்டருளுவார். மார்கழித் திருவாதிரை ஒன்று. ஆனித் திருவுத்திரம் மற்றொன்று.

பதஞ்சலி, வியாக்கிரபாத முனிவர்களுக்குப் பிறகு தில்லையில் வழிபட்டு இறைவன் அருள் பெற்ற கௌட தேசத்து அரசன் ஹிரண்யவர்மன் எனும் இரண்டாம் சிம்மவர்மன் (கி.பி.550-575) ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு மார்கழித் திருவாதிரைத் திருவிழாவும் ஆனித் திருவுத்திரத் திருவிழாவும் நடத்தினான் என கோயில் புராணம் கூறும்.

ஆக தில்லையில் நடைபெறும் ஆனித் திருவுத்திரத் திருவிழா நால்வர் ஆசாரியர் பெருமக்கள் காலத்திற்கு முன்பே நடைபெற்று வந்தது என்பது தெளிவாகும்.

ஆடல்வல்லான் பற்றி….:

இலிங்க மகா புராணத்தில் நிருத்தப் பிரியன், நித்ய நிருத்தன், நர்த்தனன், சர்வ சாதகன், என இலிங்க புராணத்தில் இறைவன் போற்றப்படுகிறான்.

சோழ மன்னர்கள் நடராஜ மூர்த்தியை ‘ஆடல்வல்லான்’ எனப் போற்றினர். நெல் அளக்கும் மரக்காலுக்கு ‘ஆடல்வல்லான்’ எனப் பெயரிட்டனர். ஒரு மாவட்டத்துக்கு ‘நித்ய வினோதம்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

ஒரிசாவைச் சேர்ந்த சிற்பப் பிரகாசம் எனும் நூல் கர்பக சங்கர நிருத்தமூர்த்தி, சௌம்ய நட்டம்பரர், நந்தி மேல் நடமிடும் நட்டம்பரர் எனும் 3 வகை நடராஜர்களைக் குறிப்பிடும்.

மச்ச புராணம் ‘புஜ தாருவனம்’ எனும் 16 கைகளை உடைய திரிபுர தாண்டவத்தை விளக்கும்.

கூர்மபுராணத்தில் வரும் சிவகீதையில் நடராஜர் யோகீஸ்வரராக கூறப்படுகிறார்.

இந்தியாவின் வடபகுதியில் இலக்குமாண்டல், ஜாகேசுவர், நீலகண்டேசுவர், குவாலியர், புந்தி, சிட்டோகர், நாக்டா, அபு, உதயபுரி, அர்த்தனா, புமாரா, சிர்புர், புவனேசுவர், கொனாரக், அஜந்தா, எல்லோரா, எலிபெண்டா, பட்டடக் கல், பாதாமி, பேலூர், ஹளபேடு ஆகிய இடங்களில் நடராஜர் திருவுருவங்கள் காணப்படுகின்றன.

கல்வெட்டுகளில் சிவ தாண்டவம்:

திரிபுவனமல்ல விக்ரமாதித்யன் -6 என்ற மேலைச் சாளுக்கிய மன்னனின் முனிராபாத் கல்வெட்டொன்றில் “சிவன் கை தட்டினால் சூரிய சந்திர மண்டலங்கள் அதிர்ந்து இவ்வுலகைச் சுமந்து நிற்கும் சேஷ நாகம் சுமை தாங்காது துடிக்க கடல் வேகமாக அலை வீசிப் பொங்குகின்றது” என்று குறிப்பிடப்படுகின்றது.

காலசூரிக் கல்வெட்டொன்று, சிவ தாண்டவத்தின் போது “ உலகமாகிய பாத்திரம் சுழல்கையில் அதனைச் சுமக்கும் நாகராஜனின் படமும் தாழ்கிறது. அஷ்ட திக் கஜங்கள் நடராஜரின் அசைவின் போது அஞ்சி ஓடுகின்றன. தண்டம் போன்ற நீண்ட கைகள் வீசும் போது பிரபஞ்சத்தின் முகடு சுழல்கின்றது” என்று கூறுகிறது.

ஹர்ஷரின் கல்வெட்டு,” வேகமான சிவதாண்டவத்தின் போது பிரபஞ்சத்தின் பௌதிக அமைப்பில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. பூமி தாழ்வதும் திசைகள் மேல் எழுவதுமாக இருக்கின்றன” என்கிறது.

வங்காளத்தில் நடராஜர்:

கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் பால, சேனா இன மன்னர்கள் நடராஜக் கலையினை வளர்த்துள்ளனர். வங்கத்தில் விக்ரம்பூர் பகுதியில் நடேஸ்வரம், நட்கர் என்ற நடராஜப் பெருமானின் பெயருடைய கிராமங்கள் உள்ளன. இது வங்கத்தின் பழைய தலைநகர்ப் பகுதியாகும். வங்கத்தின் தென்கிழக்குப் பகுதிகளான வங்கம், சம்தானம் ஆகிய இரு மாவட்டங்களில்தான் மிகுதியாக நடராஜ சிற்பங்கள் கிடைத்துள்ளன.

Text by நெல்லைச்சொக்கர்

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (7-Apr-17, 11:17 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 348

மேலே