ஆசைக்கோர் இல்லம்

ஆசைக்கோர் இல்லம்
====================

எந்திரமய வாழ்க்கை மறந்து – நான்
****இயல்பாக வாழ எனக்கொரு
தனி வீடு கட்டவேண்டும் -அதில்
****தனிமைசுகம் காணவேண்டும்..!

அழகின் எல்லையாக இருக்கவேணும் – அதன்
****அருகேஆறுகுளம் அமையவேணும்
கடனில்லா வீடு கட்டவேணும் – அதில்
****கலையழகு கொஞ்சவேண்டும்..!

சொந்த உழைப்பில் விளையவேணும் – அதில்
****பந்தங்களுக்கு பங்கில்லாநிலைவேணும்
இயற்கை சூழலோடு ஒன்றி – யதில்
****இன்பயுலா வரவேண்டும்..!

கண்குளிர ரசிப்பதற்கும் வாழ்ந்து – அதை
****கண்டுகளிப்பதற்கும் வேண்டுமொருவீடென்று
காலிமனையில் இல்லம் எழுப்ப – நெடுநாள்
****கனவோடுநான் காத்திருந்தேன்..!

காலமொரு நாள்கனிந்து வர – என்
****கனவுமதுநன வாகியதொருநாள்
நிலைக்கும் சொத்தாக இருந்தாலும் – அங்கே
****நிலையாகக்குடியேற வசதியில்லை..!

மண்ணுரிமை பெற்றுவிட்டென் – ஆனால்
****மழைக்கடவுள் அருளில்லை
நீரின்றி அமையாது உலகென – அய்யன்
****வள்ளுவன் மொழிந்ததுபோல்..!

கழனிகாடுகள் வீடுகள் குளிர்ந்திருக்க – ஆங்கே
****கனிந்தமழையின் கொடைவேண்டும்
ஆசையாய் கட்டிய இல்ல – மதில்
****அங்கேயில்லை குடிதண்ணீர்..!

வெறிச்சோடிக் கிடக்குது எம்வீடு – மனம்
****வெதும்போது பார்ப்பேனவ்வப்போது
காலமாற்றத்தால் உருவாகும் கதைபோல் – அது
****கனவுவீடாக மாறித்தான்போனது..!

வருஷமொரு முறைபார்த்து வந்தேன் – இப்ப
****வயசு அறுபத்தியாறாச்சு
கட்டிய வீட்டில் குடியேற – காலமின்னும்
****எட்டியதூரத்தில் இல்லையம்மா..!

இரவானால் பறவைகள்தன் கூட்டிற்கு – அது
****இயற்கையாய் செல்வதுபோல்
இருக்கும் வரையில் எண்ணங்கள் நம்மினிய
****இல்லம் நோக்கியேநகரும்..!

அன்புக்கோர் மனைவி பாசத்துக்கோர் பெண்
****பண்புக்கோர் பிள்ளையெனும்
வரிசையிலே வாழ்க்கையில் இன்னு – மொரு
****ஆசைக்கோரில்லம் எனவொன்று

இறையருளால் அனைவரும் பெறவேண்டும்..!


படக்கவிதைப் போட்டிக்கு சென்றுள்ள கவிதை...

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (9-Apr-17, 8:11 am)
பார்வை : 78

மேலே