வைகறை துயில் எழு - நகைச்சுவை கட்டுரை

.........................................................................
வைகறை துயில் எழு


வைகறை துயில் எழு என்கிறார் ஔவையார். விடியற்காலை துயிலெழுவது நல்ல பழக்கமாம். வைகறை என்பது எதிலிருந்து எது வரை? என் நண்பன் நான் அதிகாலை எட்டு மணிக்கெல்லாம் எழுந்திரிச்சுடுவேனே என்று பெருமை பேசுவான்.. பார்ட்டி அது இதுவென்று கொண்டாடி விட்டு நிறைய பேர் நடு இரவில்தான் தூங்கப் போவார்கள்-அதாவது 4 AM. பின்னிரவுக்கும் பிரம்ம முகூர்த்தத்துக்கும் வித்தியாசம் தெரியாமலிருக்க இந்திரன் சேவலாக மாறிக் கூவ, அகலிகையை அம்போ வென்று விட்டுவிட்டு நதியில் நீராடப் போனாராம் கௌதமர். ஒரு அந்நியனிடமிருந்து தன் கணவனை அறிய முடியவில்லையே என்று புது மனைவியை சபித்த கௌதமர் தான் பிறந்து, வளர்ந்து, வாழ்கிற இடம் பின்னிரவில் எப்படியிருக்கும், விடிகாலையில் எப்படியிருக்கும் என்று அறிந்து வைத்திருக்கவில்லை...

பிரம்ம முகூர்த்தம் 3 AMக்கு ஆரம்பமாகிறது. அதிலிருந்து சூரிய வெளிச்சம் பரவுவதற்கு முன்னுள்ள நேரம் விடிகாலை என்கிறார்கள். விடிகாலை எழுவதில் என்ன நன்மை என்றால் அந்த நேரம் மோட்டார் போட்டால் எங்கள் வீட்டுக்குத் தண்ணீர் கிடைக்கும்.. ஏனென்றால் ஆட்கள் புழங்காத போதுதானே தண்ணீர் எடுக்க முடியும்?

கவனித்திருக்கிறீர்களா? விடிகாலையில்தான் நன்றாகத் தூக்கம் வரும்.. வண்ணக் கனவுகளும் வரும்.. மூளை தன்னுடைய இணைப்புகளை இரவு முழுதும் புதுப்பித்து முடித்திருக்கும்.. நாம் ஒரு மின்சாதனத்தை சர்வீஸ் செய்து விட்டால் அதைப் போட்டுப் பார்க்க ஆசைப்படுவோம்.. அதே போல் மூளையும் தன்னைத்தானே இயக்கிக் கொள்ளும். விடிகாலை வருபவை வெறும் கனவுகளல்ல. கனவு, கற்பனை எதிர்பார்ப்பு- எல்லாம் கலந்த கலவை..

விடிகாலை எழுந்திருப்பதுதான் ஆதிமனிதனின் பழக்கம்.. அவன் நுண்ணுணர்வு நன்கு வேலை செய்வது அந்த நேரத்தில்தான். பின்பு பதினோரு மணி தாண்டி மூன்று மணிக்குள் ஒரு கலக்கமான தூக்கம் வரும்.. இதுதான் மனிதன் உட்பட பாலூட்டிகள் பழக்கம். நாய், பூனை, பசு என்று பல விலங்குகள் அந்த நேரத்தில் கண்ணயர்வதை நாம் கவனித்திருப்போம்.. கொடுத்து வைத்த சில விலங்குகள் அலுவலகத்தில் தூங்குவதைப் பார்க்க நேர்ந்தால் அது இயற்கை என்று எடுத்துக் கொள்ளுங்கள்..

ஏன் தூங்குகிறோம்? உடலுக்கு ஓய்வு கொடுப்பதற்காக மட்டுமல்ல.. நினைவுத் திறனை பாதுகாத்து வைப்பது தூக்கம்தான்.. வேண்டாத நினைவுகளை அப்புறப்படுத்தினால்தான் வேண்டிய நினைவுகளை பாதுகாக்க முடியும்.. இந்த திறன் இருந்தால்தான் கற்றுக் கொள்ள முடியும்... அதனால்தான் பரீட்சைக்குப் படிக்கிற மாணவர்கள் நன்றாகத் தூங்க வேண்டும்.. கையில் புத்தகம் வைத்துக் கொண்டு உட்கார்ந்து படிப்பது உடல் பருமனை உண்டாக்கும்.. நடந்து கொண்டே படிக்கலாம்.. பாடங்களை ரெகார்ட் செய்து கொண்டு அதை கேட்டுக் கொண்டே சமைக்கலாம்.. குளிக்கலாம்.. என் நண்பன் சிரசாசனம் செய்து கொண்டே படிப்பான்.. ! ! !

நம் உடலின் கடிகாரம் என்று சொல்லப்படும் பயோலாஜிகல் க்ளாக் ஒரு சுற்று வர இருபத்து மூன்று மணி நேரம் எடுத்துக் கொள்கிறதாம்.. பூமி ஒரு நாளை முடிக்க இருபத்து நான்கு மணி நேரமாகும்போது இது எப்படி சாத்தியம் என்று குழம்புகின்றனர் விஞ்ஞானிகள். அதுவும் மனிதனின் உடற்கட்டு புவியீர்ப்பு விசைக்கு எதிராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.. அதாவது நெட்டுக் குத்தலாய்..! .. மனிதன் தோன்றிய நேரம் புவியீர்ப்பு விசை குறைந்திருக்கலாம்.. ! ! பூமி ஒரு சுற்றுக்கு இருபத்திமூன்று மணிநேரம் எடுத்திருக்கலாம்.. அல்லது இந்த விளைவுகளால் மனிதன் தோன்றியிருக்கலாம்.. !

விடிகாலை எழுந்து சில வேலைகளை முடித்து விட்டு, (உதாரணமாக எழுத்து தளத்துக்குப் பதிவிடுதல், படித்தல், நடைப் பயிற்சி ) சூரியோதயத்துக்கு முன் படுக்கப் போய் விட்டால் எழுவது தாமதமாகும்... ஆனாலும் அதில் கிடைக்கிற புத்துணர்ச்சி வேறு எதிலும் கிடைக்காது..

அதிகாலை எழுந்திருக்க அலாரம் வைப்போம். பாழாய்ப் போன அலாரம் வைத்த அந்த நொடியிலிருந்து தூக்கம் வராது. அலாரம் அடித்து விட்டால் என்ன செய்வது என்று ராத்திரி முழுக்கப் பதைபதைப்பாய் இருக்கும்.. (என்னவோ அலாரம் நம்மை அடிக்க வந்தது போல..)

கடிகாரம் முழு எண்ணில் வந்தால்தான் எழுவேன் என்று சிலர் அடம் பிடிப்பர்.. அதாவது நான்கு மணிக்கு அலாரம் வைத்து விடுவர். அலாரத்தின் சத்தம் கேட்டு, தலையிலடித்து, துளிக்கூண்டு கண்ணைத் திறந்து பார்க்கிறபோது நான்கு மணி மூன்று நிமிடமாக இருந்தால் அது முழு எண் இல்லை.. இன்னும் இரண்டு நிமிடம் தூங்க முடிவெடுத்து நான்கு நாற்பத்தொன்றுக்கு எழுந்திருப்பார்கள்.. நான்கு நிமிடம் பாக்கி இருக்கிறது.. திரும்பத் தூங்கி திரும்ப எழுந்து, கடைசியாக ஒன்பதரை மணிக்கு படுக்கையை விட்டு வெற்றிகரமாக எழுந்து விடுவர்..

நான் பயன்படுத்திய கடிகாரம் அலாரம் அடிக்க ஆரம்பித்தவுடன் அந்த அதிர்வில் அப்படியே நகரத் தொடங்கி விடும்.. ! ! நாம் கண் திறக்காமல் லொட்டென்று தலையில் தட்டுவோமே, அந்த பாச்சாவெல்லாம் இங்கு பலிக்காது. கடிகாரம் மேஜை விளிம்புக்கு நகர்ந்து, கீழே விழுந்து, எங்காவது ஒளிந்து கொண்டு விடும்.. ! ! சில சமயம் மாடிப்படி இறங்கி இன்னொரு அறைக்குக் கூடப் போய்விடும்..! ! ஆகையால் டியூப் லைட் போட்டு, தேடு தேடுவென்று தேடி தலையில் தட்ட வேண்டும்.. நான் மட்டுமல்ல.. அறையில் இருக்கிற எல்லோருமே இதன் பொருட்டு எழுந்தாக வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொள்வார்கள்..!

என் தோழி ஒருத்தி விடிகாலை எழுந்திரிக்க ஒரு வினோதமான பழக்கத்தை வைத்திருந்தார். அதாவது அலாரம் வைத்து ராத்திரி இரண்டு மணிக்கு எழுந்திருப்பார்...! ! ! வயிறு முட்டத் தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்து விடுவார். பிறகென்ன, விடிகாலை நான்கு மணிக்கு அவர் எழுந்துதான் ஆக வேண்டும். எத்தனை பேர் அழைப்பை வேண்டுமானாலும் புறக்கணிக்கலாம்.. இயற்கையின் அழைப்பைப் புறக்கணிக்க முடியுமா என்ன ? ? ?

விடிகாலை எழுந்தவுடன் நேர்மறை எண்ணங்களை மனதுக்குள் ஊட்ட வேண்டும். அன்றைய நாளைத் திட்டமிட்டுக் கொள்ளலாம்... இயற்கையை ரசிக்கலாம்.. எங்கள் வீட்டுப் பக்கத்தில் ஒரு காக்கைக் கூட்டம் அதிகாலையிலேயே குளித்து விடும்.. தலையில் ஈரப் பொட்டுக்களோடு உலர்ந்தும் உலராத கோலத்துடன் எங்கள் வீட்டுக்கு எதிரிலிருக்கும் கம்பிகளில் உட்கார்ந்து கொண்டு எங்களையே பார்த்துக் கொண்டிருக்கும். நமக்குக் காகம் இயற்கைக் காட்சி என்றால் காகத்துக்கு நாமும் இயற்கைக் காட்சிதானே ???

பயத்துடனோ படபடப்புடனோ எழுந்திருப்பது நல்லதல்ல. கெட்ட கனவு கண்டு விழிப்பு வந்தால் கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகளையோ, நீங்கள் முன்னர் செய்த சாதனைகளையோ நினைவில் வைத்து ஒருமுகப்படுத்துங்கள். திரும்பத் திரும்ப நேர்மறை எண்ணங்களை விதையுங்கள். சாமி பெயரைக் கூட உச்சரித்துக் கொள்ளலாம். சிலர் விபூதி பூசிக் கொண்டு படுப்பார்கள். சிலர் மனைவியின் சேலையைச் சுற்றிக் கொண்டு படுக்கலாம்; அல்லது மனைவியையே சுற்றிக் கொண்டு படுக்கலாம்... நம்பிக்கை.. நம்பிக்கை முக்கியம்.


நேரமாகி விட்டது.. வாருங்கள்.. தூங்குவோம்..

எழுதியவர் : அருணை ஜெயசீலி (10-Apr-17, 11:59 am)
பார்வை : 2967

சிறந்த நகைச்சுவைகள்

மேலே