படைப்பாற்றல்

படைப்பாற்றலே உன் புகலிடம் எங்கே?
நடைப்போடுமே என் பாதச் சுவடுகள் அங்கே...

உந்தன் வரையறை தேடி அலைந்தேன்.
இணையத்தின் கரைவரை ஓடித் தொலைந்தேன்.
கிட்டவில்லை கிட்டியும் எட்டவில்லை.

சிந்தித்தேன்...
வந்துதித்தாய் என் சிந்தையில்
செதுக்கினேன்...
சிற்பியாய் என் சித்தியில்

படிப்பாற்றல் மட்டும் போதுமா படைப்பாற்றலுக்கு?
படிப்பாற்றலோடு புதுப்படைப்புகள்
படைக்க வேண்டும் என்ற
துடிப்பாற்றல் வேண்டும்
படைப்பாற்றலுக்கு.

தனித்தனியாய் சிந்தித்தல் படைப்பாற்றலா?
தனித்துவமாய் சிந்தித்தலே படைப்பாற்றல்.
அறிவுப்பூர்வமாய் சிந்தித்தல் படைப்பாற்றலா?

அறிவுக் கோட்டையின் உள்ளே
அமைதியாய் அமர்ந்து
பூட்டைப் போட்டுக் கொள்வதா
படைப்பாற்றல்?

அறியாமைக் கோட்பாடுகளின்
பூட்டுகளை உடைத்தெறிந்து
ஆர்த்தெழுவதே படைப்பாற்றல்.

கற்பித்தலில் வருவதன்று படைப்பாற்றல்.
கற்றலோடு கற்பனையை வளர்ப்பதில் வருவதே படைப்பாற்றல்.

மொத்தத்தில்
கல்வியில் பிறப்பது கற்பனை
கற்பனையில் பிறப்பது படைப்பாற்றல்
படைப்பாற்றலில் பிறப்பது புதுமை.

உலகில் புதுமைகளின்றி
உவகைகள் இல்லை.

இலக்கியத்தில் புதுமை - புதுக்கவிதை
இருட்டில் புதுமை - மின்விளக்கு
வானில் புதுமை - ஆகாய விமானம்
வாழ்வில் புதுமை - அறிவியல் வளர்ச்சி
பட்டினில் புதுமை - பசுமைப் புரட்சி
பார்ப்பதில் புதுமை - தொலைக்காட்சி
கேட்பதில் புதுமை - வானொலி
தகவல் தொழில்நுட்பத்தில் புதுமை - செல்பேசி

படைப்பாற்றலில்
புதுப்படைப்பு எதுவாயினும்
புதுமைதான்.
புத்தியைத் தீட்டி
பழமைகள் புரட்டி
புதுமுறைகள் புகுத்தி
மனிதப் பதுமைகள்
படைக்கும் பிரம்மனைப்போலே
புதுமைகள் படைப்போம்...
வெறுமைகள் துடைப்போம்.

எழுதியவர் : மோசஸ் பிரான்சிஸ் (14-Apr-17, 10:06 am)
சேர்த்தது : மோசஸ் பிரான்சிஸ்
பார்வை : 1678

மேலே