முகங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
உள்ளத்தி லொன்றுவைத்தே உதட்டளவில் வேறாக
உறவாடும் முகமொன்று !
கள்ளமிலா வதனத்தில் கனிவான பார்வையொடு
கருணைமுகம் சிலவுண்டு !
வெள்ளந்தி யாய்ப்பேசி வெகுவாக நெஞ்சள்ளி
விளங்குமுகம் சிலவுண்டு !
முள்ளைப்போல் கடுஞ்சொல்லால் உளங்கிழித்துக் கசியவைக்கும்
மூர்க்கமான முகமுண்டு !
புன்னகையால் கவசமிட்டுக் கொடும்வாளாய்க் கீறிவிடும்
பொய்முகமும் இங்குண்டு !
அன்றலர்ந்த மலர்போல புத்துணர்வாய்ச் சுடர்விட்டு
அறிவொளிரும் முகமுமுண்டு !
இன்சொல்லால் வருடிவிட்டு ஆறுதலாய் இதமளிக்கும்
இனியமுகம் புவியிலுண்டு !
நன்னெறியைக் கடைபிடித்து பிறருக்கும் போதிக்கும்
ஞானமொளிர் முகமுமுண்டு !
முகமெதிரே ஒன்றுபேசி பின்னாலே மாற்றிவிடும்
மூடர்தம் முகமுண்டு !
பகட்டெதுவும் இல்லாமல் பக்குவமாய்த் தாயைப்போல்
பரிவளிக்கும் முகமுமுண்டு !
முகமூடி அணிந்தாற்போல் முற்றிலுமே மாறுபட்ட
முரணான முகங்களுண்டு !
அகவழகை அப்படியே காட்டிவிடும் கண்ணாடி
அகிலத்தில் முகந்தானே !!!
சியாமளா ராஜசேகர்