ஆசிரியைக்கு பணிநிறைவு வாழ்த்துக்கள்

திருமதி.பாரத செல்வி

மாதா,பிதா,குரு,தெய்வம் என்று சொல்வார்கள்
குருவாக தோன்றி பிதாவாக வளர்ந்து மாதாவாக விடை பெறும்…
பாரத செல்வி அம்மாவிற்கு
உங்களுக்கு தெரிந்த மொழிகளில்
எனக்கு தெரிந்த வழிகளில்
கிறுக்கிய ஓவியங்கள் இவை!!!

பாரதி கண்ட புதுமைப்பெண் என்பதா?
பாரதியை ஈன்று எடுத்த கவிதாயினி என்பதா?
பாரதத்தை காக்கும் தேவி நீ என்பதா? இல்லை
பார் எங்கும் ஒலிக்கும் பாரதசெல்வி நீ என்பதா?

அன்று! மொழிகளால் அதட்டல் செய்தவர்
இன்று! விழிகளால் கைதட்டல் பெறுகிறார்
அன்று! கனிவுடன் கல்வியை தந்தவர்
இன்று! கண்ணீரில் முழ்கடித்து செல்கிறார்....

எமனை மிஞ்சும் வீரம்
கடவுளை எச்சரிக்கும் கோபம்
குழந்தைகளை கொஞ்சும் ரூபம்
இவை மட்டுமே! இந்த பதுமையின் முழு உருவம்…

நீதி தேவதையும் சற்று வெட்கத்தில் தலை குனியலாம்…
நீதி அரசர்களும் தன் தன் இருக்கையை விட்டு சறுக்கலாம்…
புத்தரும் தன் பொறுமையை இழக்கலாம்…
நீதியும்,நேர்மையும்,பொறுமையும் என்றும் இவரை நாடலாம்…

அன்று! குலசேகரத்தால் இவருக்கு பெருமை
இன்று! இவரால் குலசேகரத்திற்கே பெருமை
பெயரளவில் இல்லை இவர் பங்கு இக்கல்லூரியில்….
இவர் பெயர் சொல்லும் விதத்தில் உள்ளது இவர் பங்கு இக்கல்லூரியில்…..

வாழ்க்கை ஒன்றே வாழ்ந்து பார்ப்போம்…
காற்று ஒன்றே சுவாசித்து பார்ப்போம்....
இதயம் ஒன்றே துடித்து பார்ப்போம்…
இவரின் நினைவுகள் ஒன்றே என்றும் நாங்கள் நினைத்து பார்ப்போம்…

பாசத்திற்கு விருந்தாகுபவர்
பகைமைக்கு புலியானவர்
எதிரிகளுக்கு எமனாபவர்
இவர் மட்டுமே என்றும் எங்கள் தாயுமானவர்…!

மொழி அசைவினில் ஆங்கிலம் அடங்கும்...
இவர் இமை அசைவினில்
இமயம் நடுங்கும்…

நியாயம் இவர் பெயர் சொல்லும்
தன்மானம் இவரை சுற்றி செல்லும்
கோபம் சற்றே சிந்தித்து நிற்கும் இவரை விட்டு செல்ல…

ஒவ்வொருவனுக்கும் ஒரு பெயர்
இவர்களால் ஆனது தனிப்பெயர்
நாளை வகுப்பறையின் நினைவுகளும் சுமக்கும் இவர் பெயர்…

விழி அசைவினில் விஸ்வரூபம் எடுக்கிறார்...
மொழி அசைவினில் யாழிசை மீட்டுகிறார்…

மாற்றங்கள் எதுவாயினும் அன்றே!
மாறாதது இவரது நேர்மை ஒன்றே
முப்பொழுதும் முகத்தில் ஒரு பொன் சிரிப்பு…
நெற்றிகண் திறப்பின் குற்றம் குற்றமே! என்பதே இவர் சிறப்பு…

இருள் சுருங்கும் வகுப்பறையில்
புகும் வளர்பிறையற்ற நிலவு நீங்கள்
இனி என் செய்யும்… என் வகுப்பறை
நிலவு இல்லா இருளை காணுகையில்…

எங்கள் தந்தையின் தோழமையும்
எங்கள் தாயின் அன்பினையும்
எங்கள் தோழமையின் அறிவுரைகளையும் உன்னில் கண்டோம்
இனி என்ன செய்வோம் இப்பிரிவினை கண்முன்னே காணுகையில்…

மகிழ்ச்சி இவர் கூடே நடை போட...
துன்பங்கள் தலைதெரித்து ஓட…
எங்கள் நினைவுகள் என்றும் இவரை நாட…
அன்றும்… இன்றும்.... என்றும்…
எங்களுடன் பயணிக்கும்
உங்கள் நினைவுகளுக்கு தலைவணங்குகிறோம்…

நான் கிறுக்கிய ஒவ்வொரு வரிகளின் முடிவிலும்
நின்று சிந்திக்கின்றன என் விழிகள்
நான் காணும் இத்தருணம் கானல் நீராய் மறையுமா! என்று
விழிகளில் மலரும் கண்ணீருடன் விடை பெறுகிறேன்…


என்றும் அன்புடன்…
கண்ணன் சிவா

எழுதியவர் : சிவா (17-Apr-17, 9:28 pm)
பார்வை : 7497

மேலே