மீண்டும் உனக்காகக் காத்திருக்கிறேன்

என் பலவருடக்
காத்திருப்புக்குப் பின்
எனை அள்ளிக்கொண்டாய்...
என் நிறத்தில்
இன்னும் சிலவற்றையும்
சேர்த்துத்தான்..
சந்தோஷமாக
எங்கோ புறப்பட்டாய்...
அன்று இரண்டாம் முறையாக
உனக்கு உபயோகப்பட்டேன்..
அன்று முழுதும்
இன்பமாகவே இருந்தாய்...
என்னுடன் நீ மிகவும் அழகாக
இருப்பதாக எல்லோரும்
சொன்னார்கள்...
உன் முகத்தில் புன்னகை...
இரவுக்கு முன் நிழலில்
எனை உலர்த்தினாய்...
உன் வியர்வை என்னிலிருந்து
விடுபட்டுப்போக...
உலர்ந்தேன்...காய்ந்தேன்...
சற்று நேரத்தில் சூடு வாங்கி
பின் காத்திருக்கப்போகிறேன்...
அடுத்த அரை நூற்றாண்டில்
அதிக பட்சம் ஒரு முறை
உன் கண்கள் என் மீது
மறுபடியும் விழும்
என்ற நம்பிக்கையுடன்
நீ ஆசையாய்
எனை எடுத்து
மீண்டும் அழுக்காக்க...
என் போன்ற இன்னும் ஐந்தாறு
பட்டுப் புடவைகளுடன்...
உன் வீட்டு அலமாரியின்
ஆரவாரமில்லா மூலையில்
அலங்காரமாய்த் தொங்கியபடி
தங்கக்கரையுடன்
சிவப்பு நிறத்தில் நான்...

எழுதியவர் : அபிராமி சுரேஷ் (18-Apr-17, 8:25 am)
சேர்த்தது : Abirami Suresh
பார்வை : 569

மேலே