கனவுகள் பிரசவிக்கும் காட்சிகளை

===================================
ஊரெங்கும் அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்தி
வேலையற்ற மனிதர்கள் இல்லாத தேசத்தைக்
கட்டி எழுப்பக் கடும்பிரயத்தனம் எடுத்து
உலகத் தரத்துக்கு உயர்த்திவைத்த உத்தமரை

அகராதிகளில் ஊழல் என்னும் வாக்கியமும் கூட
அழிக்கப்பட்டு , ஊழல் என்றால் என்னவென்று
அறியாத இளம் சமுதயாத்தை உருவாக்கி
திருடர்கள் நாடென்ற பெயரை மாற்றித்
திருநாடு என்ற சொல்லுக்கு இலக்கணமாக்கிய எந்தலை

அநாதை மடங்கள், முதியோர் இல்லங்கள்,
இரவுக்களியாட்ட விடுதிகள் அழிக்கப்பட்டு
அங்கெல்லாம் அறநெறி கூடங்களும்
இலவச பாடசாலைகளும், மருத்துவமனைகளும்
அமைத்துவைத்து மக்கள் நலனில்
மனநிறைவு கொண்ட மாணிக்கத்தை

தலைவர்களைப் பார்த்துத் திருடக் கற்றுக்கொண்ட
மக்களை மாற்றி, மக்களிடமிருந்து திருடர்களும்
மனிதராக வாழ்வதெப்படி என கற்கவைத்த
கலா திலகத்தை

பதவிகாலம் முடிந்த நாளொன்றில்
மனைவி மக்களுடன் அரண்மனையை விட்டு
வெறுங்கையோடு வெளியேறும் தலைவர்
நாட்டுக்குழைத்த ஆளுமையின் பேரழகு
என்றெல்லாம் கனவுகளை பிரசவிக்கும் காட்சிகளை
கனவுகளிலும் காண முடியாத காட்சியாகவே
காண முடிகிறது.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (19-Apr-17, 2:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 79

மேலே