அரசனின் கஜானா

பஞ்சம் போர்த்திய
ஊர் மக்களில் ஒருவன்
அரசனின் கஜானாவை
கனவில் பார்த்ததாகக் கூறினான்.

வாய் பிளந்து அவன் கனவை
ஊர் மக்கள் முதன் முதலில்
ஒரு பொழுது போக்குக்காக
கேட்க ஆரம்பித்தார்கள்.

நிலவொளியில் மினுமினுத்ததாகவும்
சூரிய ஒளியில் மின்னலேன
கண்களைக் குருடாக்கியதாகவும்
அவன் கூறினான்.

சமசீர் பொருளாதாரத்தை
துளியும் மதிக்காத மன்னன்
தன் அந்திமக் காலத்தில்
சமசீராகக் கஜானாவை
தன் வாரிசுகளுக்கு
பிரித்துக் கொடுத்த பிறகு
முதன் முறையாக வெளியேறினான்
அரண்மனையை விட்டு.

மன்னனை அந்த நிலையில் கண்ட மக்கள்
செயலிழந்து போனார்கள்.
பலர் வயிற்றிலும் வாயிலும்
அடித்துக்கொண்டு உயர்ந்த குரலில்
ஒப்பாரி வைத்தார்கள்.
மன்னனின் நிர்வாணத்தை மறைக்க
மக்களின் நிர்வாணமே
போதுமானதாயிருந்தது அப்போது

எழுதியவர் : பிரேம பிரபா (21-Apr-17, 8:24 am)
பார்வை : 57

மேலே