என்னை உணர்த்திய இறந்த வாழ்வு-காடன்
தினந்தோறும் நடந்து செல்லும்
வழியில் இன்றுதான்
அந்தக் கல்லறையைப் பார்க்கிறேன்
சிலகணங்கள் நின்று லயித்து
பழமையில் சிதிலமுற்ற அது
அருதியாகிவிட்டக் காட்டை
சொற்பமாய்த் தம்மைச் சுற்றிலும்
வளர்த்து வைத்திருக்கிறது
அந்திப் புழுதியோடு வேகமாய்
வந்த காற்று கூட
அதன் பேரமைதிக்கு பங்கமின்றிக்
கடந்தது ஆச்சர்ய தருணம்
என்றோ முடிந்த ஒரு
பெருவாழ்வு இன்னும் அங்கே
உயிர்த்திருக்கிறதை சட்டென்று
உணர்ந்த கணம் இதுவரை
கிட்டிவிடாத அலாதி
இனி அக்கல்லறையின்றி
ஒருபோது அவ்வழிப் பாதை கடக்காது
அறியாத ஒருவருடைய வாழ்வு
நிழல் போலத் தொடரும்
அது அமானுஷ்யமல்ல
என்னை எனக்கு உணர்த்தும்
இறந்த ஒரு வாழ்வு...!!