திரும்பாதா இளமை

திரும்பாதா இளமை
வயதை என் உதடுகள்
உதிர்க்கும் முன்னே
முகச்சுருக்கங்கள்
காட்டிச் சிரித்தன. . . .
தேய்ந்து போன கைரேகையோ
உன் உழைப்பால் எனை
உறிஞ்சிவிட்டாய் என்றது . .
கோணிப்போன முதுகோ
ஏற்றிய பாரம்
அதிகம் என்றது. . .
காலச்சக்கரம் தன்
சுழற்சி வேகத்தை
அதிகப்படுத்திக் கொண்டதாய்
மனம் ஏனோ
நிந்தித்தது. . .
அந்த இளமைக்கால
நினைவுகள் மட்டும்
நித்தமும் மனதில்
தித்தித்தது . . .
சோற்றுக்கு பஞ்சமிலா
விவசாய குடும்பமதில்
விளைசல் கூடும்
வருடத்தில்
அம்மாவின் கழுத்தில்
வடம் தொங்கும்...
மழை பொய்த்த
காலம்தனில்
அவள் தாலி மட்டுமே
மிஞ்சும்...
கண்விழிக்கும் நேரத்தில்
அம்மாவோ தோட்டத்தில்
அக்காள் போட்ட குடுமியது
கோணலாய் போனதென்று
கொட்டு வைக்க மறக்கவில்லை
நித்தமும் ஆசிரியை...
பக்கத்து ஊருக்கு
பணிநிமிர்த்தம்
போன அப்பா
கடைசிப் பேருந்தில்
இனிப்புடன் வருவாரென
கண்கொட்ட விழித்திருந்த
கனவுக்காலம் அது....
வில்லுப்பாட்டுக்கு
பாட்டியுடன் கேட்கப்போய்
மடிகிடந்த சேவுமிட்டாய்
தின்றது யார் தெரியாமல்
அழுது அரற்றியது
இன்றளவும் என்செவியில். . .
குளத்தங் கரை மீது
தோழியுடன் அமர்ந்து
புளியங்காய்
உப்பு வெல்லம்
சேர்த்திடித்து
தின்ற சுவை
தித்திப்பு அடங்காமல்
என்றென்றும் என்நாவில்...
மொழுகி வைத்த
நடு முற்றமதில்
சோளக்கண் கொண்ட
சாணப் பிள்ளையாரில்
தித்திப்பூ சொருகி
பக்தியாய். . . .
தோழியுடன் பகிர்ந்துண்ட
அந்த நிலாச் சோறு
ஏங்கச் செய்கிறதே
எங்கே அந்த
இளமை என்று.........
சு.உமாதேவி