வெம்பும் பிஞ்சுகள்

வெம்பும் பிஞ்சுகள்
அம்மா!
கல்விக் கரைசேர்க்க
எனை துயரக்கடலில்
மூழ்கடித்தவளே!
இங்கே!
படி...படி... எனும் இடியோசை
காய்ச்சிய ஈயமாய்
காதைப் பதம் பார்த்து
கொல்கிறதே..
லயிக்காத உணவு உருண்டையோ
கெண்டை முள்ளாகி
தொண்டை குத்தி
நிற்கிறதே!...
மனனம் செய்வதன்றி
மாற்றறியா மூளையது
சுயமாய் சிந்திக்க
சுரத்தில்லாது
தவிக்கிறதே!...
சிறார் சிறைதப்பி
சீரழிந்து வந்தவன்போல்
சிந்தையெல்லாம் ஓர் எண்ணம்
விடுமுறை நாட்களிலும்
விரட்டி என்னை
வாட்டிடுதே!..
இங்கே!
மனம் தனை சாகடித்து
பணம் பண்ணும் கருவியாக்க
மதிப்பெண் அள்ளும்
குப்பை கூடைகள் தயாராகி
வருகிறதே!...
சு.உமாதேவி