காதல் பிழை
காதல் பிழை....
பசியால் நிறைந்த வயிறு
பார்வையால் தூர்ந்த மனது
விசையாய் சுழற்றும் வறுமை
விதிவலிக்கும் இவள் வெறுமை
வக்கிர வசீகர வன்மர் மொழி
வாஞ்சையில் எச்சிலிட வருடுவிழி
இந்திரனுக்கும் கீழான இச்சைக்கழி
இடறி வீழ்ந்தாள் பதுங்குக்குழி
இதயமற்று ஈனமாய் அருங்கியப் பருந்து
இழிந்துப் பறித்தது பருவ விருந்து
இருட்டின் இம்சைகள் பலருக்கு யோகம்
இளமையின் இன்பங்கள் இவளுக்கு சாபம்
கையேந்தினாள் மெய்யானது காட்சிமறை
பொய்யேந்திக் காமுகர் கபடவளை
மெய்தீண்டிய பழுதாய் பெற்றவிலை
மையிருளாய் சுமந்தாள் காதல்பிழை
உடலில் ஊர்ந்தவர் ஊருக்கு உயர்தாசர்
உய்வின்றி இழந்தவள் கடைகழி வேசியர்
வறுமைக்கும் சிறுமைக்கும் கருவான புனிதம்
சமூகச் சாக்கடையில் உருவானப் புதினம்!
கவிதாயினி அமுதா பொற்கொடி